Published by R. Kalaichelvan on 2019-10-24 16:27:04
(இராஜதுரை ஹஷான்)
அரசியல்வாதிகளின் தலையீடுகள் ஏதும் இல்லாமல் துறைசார் நிபுணர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை தாமரை தடாக அரங்கில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த மக்களின் அரசியல் அபிப்ராயங்கள் மற்றும் கோரிக்கைகளை உள்ளடக்கியே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளது.
இந்த விஞ்ஞாபனத்தில் எவ்வித பக்கச்சார்பான காரணிகளும் உள்ளடக்கப்படவில்லை. அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதரத்தை முன்னேற்றுவதற்கு 500ற்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் கொள்கைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மனித உரிமை, விவசாயம், மற்றும் தொழினுட்ப விருத்தி உள்ளிட்ட பிரதான மூன்று விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதத்தில் கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் செல்வந்த தரப்பினரது கருத்துக்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பாராம்பரிய அரசியல முறைமையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற காரணத்தினால் கல்வி துறையில் முன்னேற்றமடைந்தவர்களின் கருத்துக்கும் , கொள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.