வவுனியாவில் நேற்று  வீட்டைப்பூட்டிவிட்டு பாடசாலை சென்ற இளம் ஆசிரியரின் ஒன்றின் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கிருந்து பணம் மற்றும் சுவாமி அறையிலிருந்து இரண்டு உண்டியல்களையும் திருடிக்கொண்டு வெளியே காணப்பட்ட ஆசிரியையின் பாதணியை அணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் அருகிலுள்ள வீட்டின் சி.சி.ரி கெமராவில் பதிவாகியுள்ளது. 

இதனை வைத்து திருடனை பொலிசார் இனங்கண்டு கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியிலுள்ள இளம் ஆசிரிய குடும்பத்தின் கணவன், மனைவி இருவரும் தமது வீட்டைப்பூட்டிவிட்டு பாடசாலைக்கு சென்றுள்ளனர். நேற்று மதியம் நீள காற்சட்டை நீள முழுசேட்டு அணிந்து கையில் பை ஒன்றுடன் அவர்களின் வீட்டிற்குள் முன் கதவால் நுழைந்த திருடன் கதவை உடைத்துக்கொண்டு உள் சென்று ஆசிரியரின் பிறிதொரு இரண்டு கைப் பைகளிலிருந்து 20ஆயிரம் ரூபாவினையும் சாமி அறையிலிருந்த இரண்டு உண்டியல்களையும் தான் கொண்டு வந்த பையினுள் வைத்துவிட்டு வீட்டிலிருந்த அலுமாரிகளை சோதனை மேற்கொண்ட பின்னர் முன்கதவு வாசல் வழியாக வெளியேறி வெளியே காணப்பட்ட ஆசிரியையின் பாதணியையும் அவசரத்தில் மாறி அணிந்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

திருடன் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய இரண்டு சம்பவங்கள் அனைத்தும் தெளிவான முறையில் அருகிலுள்ள வீட்டின் சி.சி.ரி கெமராவில் பதிவாகியுள்ளது. பிற்பகல் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தலைவரான ஆசிரியருக்கு வீடு உடைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்துள்ளார். உடனடியாக பாடசாலையிலிருந்த ஆசிரியையான மனைவிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி நடந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார்.

இருவரும் வீட்டில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் குறித்து நேற்று  மாலை பொலிசாருக்கு முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர். பொலிசார் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்குச் சென்ற விசாரணைகளை மேற்கொண்டபோது திருட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் சி.சி.ரி. கெமராவில் பதிவாகியுள்ள விடயங்களை ஆராய்ந்து காணொளியின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடன் குறித்தும் வெளியேறியது குறித்தும் அறிந்து கொண்டு திருடனை இனங்கண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.