அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோட ஆரம்பித்ததை அடுத்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   டெங்குநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிகளவிலான சாத்தியகூறுகள்  உள்ளன. எனினும் அவ்வாறான பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் இருமல் , தடுமல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுவதாக  சுகாதார  கல்வி பணியகம் தெரிவித்துளளது.

எனினும் இதுவரைக்கும் பாராதூரமான நோய்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமது சுற்று சூழலை முழுமையாக மக்கள்  சுத்தத்துடன்  வைத்திருத்தல் வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். கொதித்தாறிய நீரை பருகுதல் நல்லது எனவும் பணியகம் ஆலோசனை விடுத்துள்ளது.

வௌ்ள நீர் வடிந்தோடுவதனை அடுத்து எவ்வாறான நோய் தாக்கங்கள் ஏற்படும் என்பது தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே     சுகாதார கல்வி பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த மேற்கண்டவாறு தெரிவத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு நகரின் வெல்லம்பிட்டி, களனி ,தொடலங்க, கொலன்னாவை மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளிலும் கொழும்பு புற நகர் பிரதேசங்களான மல்வானை ,கடுவலை, ஹோமாகம மற்றும் அவிசாவளை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலும்  வௌ்ளம் வடிந்தோட ஆரம்பித்தள்ளது. அதேபோன்று கம்பஹா ,வத்தளை ,ஜாஎல புத்தளம் கிளிநொச்சி மற்றும் அநுராதபுரம் ஆகிய வௌ்ளம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் நிலைமை சீராகியுள்ளது.  அதிகமான இடங்களில் வௌ்ள நீர் முழுமையாக வடிந்தோடிவிட்டது.  

இந்நிலையில் தற்போது நீர் வடிந்தோடியதனை அடுத்து பலவிதமான நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வௌ்ள அனர்த்த பாதிப்பை விடவும் பாரதூரமானது. நீரிலேயே சில தினங்களாக பெருந்தொகையானோர் நிலைகொண்டிருந்தமையின் காரணமாக இருமல், தடுமல், வயிற்றோட்டம் போன்ற நோய்கள் அதிகளவில் ஏற்படுதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுப்பதற்கு நிவாரணங்களாக வரும் அனைத்து உணவுகளையும்  உட்கொள்வது சுகாதாரத்திற்கு நல்லதல்ல. நல்ல சுத்தமான உணவுகளை உண்ணவேண்டும். மேலும் குடிநீரை முடிந்தளவு கொத்தாறியதன் பின்னர் பருகுதல் நல்லதாகும்.

அத்துடன் இவ்வாறான நோய்கள் அதிகளவிலான குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கே ஏற்படும். எனவே குழந்தைகளில் உணவு விடயத்தில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும். 

இதேவேளை வீடுகள் சுத்தம் செய்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், சுற்று சூழலை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றினால் நோய் தாக்கத்தலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

 நோய் தாக்கத்தில் நுளம்பினால் ஏற்பட கூடிய தாக்கமே அதிகமாக இருக்கும். இதன்பிரகாரம் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தற்போதைக்கு எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பாரதூரமான நோய் தாக்கங்கள் ஏற்படவில்லை. பாராதூரமான நிலைமை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.