ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்கள்  சூடு­பி­டித்­துள்ள நிலையில் சிறு­பான்­மை­யினத் தலை­வர்கள் தொடர்பில் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி இன­வா­தத்தை கிளப்பும் முயற்­சிகள்  தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன.  இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டி பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு அர­சியல் ரீதியில் நன்­மை­களைப் பெறு­வ­தற்கு இன­வாத சக்­திகள்  முயன்­று­வ­ரு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. 

 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்­பெற்ற தாக்­கு­தலையடுத்து முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்து வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. அத்­து­டன் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களை இலக்­கு­வைத்தும் பெரும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்­பட்­ட­துடன் விமர்­ச­னங்­களும்  முன்­வைக்­கப்­பட்­டன. முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பதவி வில­க­வேண்டும் என்றும்  கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன. 

 முன்னாள் ஆளு­நர்­க­ளான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக இன­வாதப் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவர்கள் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­ட­வேண்டும் என்று போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டன. இதன் கார­ண­மாக ஆளு­நர்­க­ளான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா,  அசாத் சாலி ஆகியோர் பதவி வில­கி­யி­ருந்­தனர்.  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன.  தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான சஹ்­ரா­னுடன் இவரைத் தொடர்­பு­ப­டுத்தி  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­ட­துடன் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டன. 

 இத்­த­கைய இன­வாத செயற்­பா­டுகள் முஸ்லிம் மக்கள் மீது வன்­மு­றை­யாக  கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டலாம்  என்று கரு­திய முஸ்லிம்  தலை­மைகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­ட­துடன் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த சகல முஸ்லிம் அமைச்­சர்­களும் தமது பத­வி­களை துறந்­தி­ருந்­தனர்.  இவ்­வாறு  பெரும் சகிப்­புத்­தன்­மை­யுடன் முஸ்லிம் தலை­மைகள் அந்த வேளையில் செயற்­பட்­டி­ருந்­தன. 

 தற்­போது  ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்டு  பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளையும் தலை­வர்­க­ளையும்  இலக்கு வைக்கும் வகையில்  இன­வாத பிர­சா­ரங்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.  இதன்­மூலம்  பெரும்­பான்மை சிங்­கள மக்­களை  குழப்பி அர­சியல் இலாபம் தேடு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. 

 அண்­மையில்  வடக்கு, கிழக்கை சேர்ந்த ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்­களின் பொது­வான பிரச்­சி­னை­களை பிர­தான வேட்­பா­ளர்­க­ளிடம் முன்­வைப்­ப­தற்கு  முடிவு செய்­தி­ருந்­ன.  இதற்­காக 13 அம்­சங்கள் அடங்­கிய பொதுத் திட்­ட­மொன்­றையும் அவர்கள் தயா­ரித்­தி­ருந்­தனர்.  ஒரு­மித்த நாட்­டுக்குள் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்ற  நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த பொது ஆவணம் தொடர்­பிலும்  தற்­போது தென்­ப­கு­தியில்  பெரும் சர்ச்சை கிளப்­பப்­ப­டு­கின்­றது. 

 இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி,  தமிழ் மக்கள் கூட்­டணி,  ரெலோ,  புௌாட்,  ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய ஐந்து கட்­சி­களும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து அந்த விட­யங்கள் தொடர்பில்  ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும்  பிர­தான வேட்­பா­ளர்­க­ளிடம் கலந்­து­ரை­யாடி தேர்தல் தொடர்பில் முடி­வொன்­றினை எடுப்­ப­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்­தனர். ஆனால்  இந்த கட்­சி­களின் பொது­வான நிலைப்­பாடு தொடர்பில் இன­வாதப் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. 

 இந்த 13 அம்ச திட்­ட­மா­னது நாட்டை பிள­வு­ப­டுத்தும் என்றும் மிகப்­பா­ர­தூ­ர­மான  யோச­னைகள் இதில் அடங்­கி­யுள்­ள­தா­கவும்  தென்­ப­கு­தியில் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.  விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத ரீதியில் அடைய முடி­யா­த­தை  ஆவ­ண­ரீ­தியில் அடை­வ­தற்கு இந்த ஐந்து தமிழ் கட்­சி­களின்  தலை­வர்­களும் முயன்று வரு­வ­தாக  பிர­சா­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 

 இவ்­வாறு தமிழ் மக்­களின் உரி­மைகள், பிரச்­சி­னைகள் தொடர்பில்  தமிழ் கட்­சி­களின் தலை­வர்கள்  கோரிக்­கை­களை விடுக்­கின்­ற­போது அதனை இன­வாத கண்­ணோட்­டத்­துடன் அணுகி அதன்­மூலம் தென்­ப­கு­தியில்  அர­சியல் இலாபம் தேடும் முயற்­சி­களே இடம்­பெற்று வரு­கின்­றன. 

 இதே­போன்றே ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தொடர்­பிலும் பொய்­யான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு  இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டுகள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த 2015ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான சஹ்ரான் மற்றும் அவ­ரது சகோ­தரன் ஆகியோர் பங்­கு­பற்­றிய நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் கலந்­து­கொண்­டி­ருந்தார்.  அந்த ஒளிப்­ப­திவை வைத்து சஹ்­ரா­னுடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பை வைத்­தி­ருந்­ததாக பிர­சா­ரங்கள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. 

 இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில்  விளக்­க­ம­ளித்­துள்ளார். பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வ­டைந்த பின்னர்  முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்­களை தான் ­பார்­வை­யிட சென்­றி­ருந்த சமயம் அங்கு சஹ்­ரானும் சகோ­த­ரரும் இருந்­துள்­ளனர்.  அப்­போது அவர்கள் யார் என்­பது கூட  எனக்குத் தெரி­யாது. அவ்­வாறிருக்­கையில் அந்த நிகழ்வை வைத்து எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள்  சுமத்­தப்­ப­டு­கின்­றன. இன­வா­தத்தைப் பரப்பும் வகையில் செயற்­பாடு இடம்­பெ­று­கின்­றது என்று  அமைச்சர் ஹக்கீம் விளக்­கிக்­கூ­றி­யுள்ளார். 

 இத­னை­விட மல்­வத்து பீடா­தி­பதி திப்­பட்­டு­வாவே சித்­தார்த்த சுமங்­கள தேரரை நேற்­று­முன்­தினம் சந்­தித்து  ஆசி­பெற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன்­ மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விளக்கிக் கூறி­யுள்ளார்.  அமைச்சர் ஹக்­கீ­மினது கருத்­துக்­களை செவி­ம­டுத்த மல்­வத்து மாநா­யக்க  தேரர் இத்­த­கைய நிலைமை தொடர்பில் கவலை அடை­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

 முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி  இன­வா­தத்தை பரப்பி அர­சியல்  நலன்­களை பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லேயே இத்­த­கைய செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற தலை­வ­ரான ஹக்கீம் மீது  இன­வாத சக்­திகள் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதும் அதனை சில ஊட­கங்கள் பிர­சா­ரப்­ப­டுத்­து­வதும்  இனங்­க­ளுக்­கி­டை­யே­யான முறுகல் நிலையை உரு­வாக்­கு­வ­தற்கும்  வழி­வ­குத்­து­விடும். 

 ஏப்ரல் 21  தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட  அடக்கு முறை­களின் தொடர்ச்­சி­யா­கவே  முஸ்லிம் தலை­வர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களும் அமைந்­தி­ருக்­கின்­றன. தன்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்­திலும்  விளக்­க­ம­ளித்­தி­ருக்­கின்றார். 

 எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில்  அர­சியல் சுய­ந­லன்­க­ளுக்­காக இன, மத­வாத செயற்­பா­டு­களை தூண்­டி­விடும் நடை­மு­றை­யா­னது தொடர்ந்து வரு­கின்­றது.  தேர்­தலில்  வெற்­றி­ பெ­று­வ­தற்­கா­கவும்  அர­சி­யலில் நலன்­களைப் பெறு­வ­தற்­கா­கவும் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த இன­வாத சக்­திகள் இத்­த­கைய செயற்­பா­டு­களை தொடர்ந்து வரு­கின்­றன.  எமது வர­லாற்றை எடுத்து நோக்­கினால் அது நன்கு புலப்­படும். 

 சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வதும் வன்­மு­றை­களை கட்­ட­வி­ழ்த்து விடு­வதும் தொடர்­க­தை­யா­கவே மாறி­வ­ரு­கின்­றது.  தற்­போ­தைய நிலையில் சிறு­பான்­மை­யின மக்­களின் உரி­மைகள் குறித்து பேசி­னாலோ, அல்­லது  அந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காணவேண்டியதன்  அவசியம் குறித்து வலியுறுத்தினாலோ  அந்த அரசியல் தலைவர்களை  துரோகிகளாக பார்க்கும் நிலைமையே தென்பகுதியில் மேலோங்கி வருகின்றது. 

 இனவாத, மதவாத பிரசாரங்களே நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்திருந்தது.  பேரிழப்புக்களை சந்தித்த பின்னரும்கூட இன்னமும் பேரினவாத சக்திகள்  இந்த வரலாற்றைப் பாடமாகக் கொள்ளாது மீண்டும் மீண்டும் தமது செயற்பாடுகளை தொடர்ந்து வருவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாது. 

எனவே  இனியாவது அரசியல் சுயநலன்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்குவதையோ, அல்லது மதங்களுக்கிடையே முரண்பாடுகளை  ஏற்படுத்துவதையோ அரசியல் தலைமைகள்  கைவிடவேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல் தலைமைகள் இதனை உணர்ந்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.