(எம்.மனோசித்ரா)

ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்படிபொல நகர் - பொரலந்த சந்தியில் வெலிமட பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முச்சக்கரவண்டியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் மூவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 29 மற்றும் 31 வயதுடைய குருதலாவ , வெலிமட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இதே போன்று கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்புவ வீதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்று பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 2 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 30 மற்றும் 32 வயதுடைய நீர்கொழும்பு , கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.