புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் கட்டிடத்திற்குள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பிரிவு, சிறுவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பிரிவு, விபத்து பிரிவு, ஆண்கள், பெண்கள் தங்கியிருந்து கிகிச்சை பிரிவு, கிளினிக் நிலையம் ஆகிய இடங்களில்  இவ்வாறு கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்காணப்படுகின்றது.

அத்துடன், கட்டாக்காலி நாய்கள் நோயாளர்கள் மற்றும் அவர்களை பார்வையிட வருபவர்களை கடிக்க முயற்சிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மேலும், குறித்த கட்டாக்காலி நாய்களின் நடமாட்டத்தினால் வைத்தியாசலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களும், அவர்களை பார்வையிட வரும் உறவினர்களும் 'வெறிநோய்' போன்ற நாய்களினால் ஏற்படும் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, புத்தளம் தள வைத்தியசாலையில் இரவு, பகலாக கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இக்கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.