எதிர்காலத்தில் குடிநீர் உட்பட நீர் தேவை மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சியில் முன்னால் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன வேட்பாளரிற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் சந்திப்பொன்று இன்று புதன்கிழமை கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் லங்கா சமசமாஜ கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு மக்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

5 ஆண்டு காலமாக  ஐக்கிய தேசிய கட்சிதான் ஆட்சியில் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியில் காலத்தில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் அன்றாடம் உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்த வருகின்றனர். நல்லாட்சி அரசு என தெரிவித்துக்கொண்டு 5 ஆண்டுகளில் பல்வேறு விதமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். 

இந்த ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மத்திய வங்கி முறிகள் மோசடியை குறிப்பிடலாம். இந்த முறிகள் மோசடியில் பிரதான பங்கினை இப்போதும் பிரதமராக உள்ள ரணில் விக்ரமசிங்கவும் காணப்படுகின்றார். அவர்கள் வங்கியை கொள்ளையிட்டுள்ளனர். பாரிய மோசடியை மேற்கொண்டுள்ளனர்.

எமது 10 ஆண்டு ஆட்சியின் காலத்தில் பெறப்பட்ட கடன் தொகையைவிட ஐக்கிய தேசிய கட்சியின் 5 வருட காலத்தில் பெறப்பட்ட கடன் தொகை அதிகமாகவே காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் மக்களை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

 இந்த அரசாங்கம் மக்களை போசாக்கற்ற நிலைக்கு தள்ளியுள்ளனர். மக்களை வறுமைக்குள் கொண்டு சென்றுள்ளனர். எமது நாடு இந்த ஆட்சி காலத்தில் அபிவிருத்தியில் பின்தள்ளியுள்ளது. அதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் வெளிநாட்டு கொள்கையே. இலங்கையில் இருக்கும் வளங்கள் அமெரிக்க நிறுவனங்களிற்கு தாரைவார்க்கப்படவுள்ளது. இலங்கையின் நீர்வீழ்ச்சிகள் அமெரிக்க நிறுவனங்களிற்கு வழங்கப்படவுள்ளது. 

அதேபோன்று எதிர்காலத்தில் நீங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களும் அவ்வாறு அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு கொண்டு செல்ல்படப்போகின்றது. எதிர்காலத்தில் நீங்கள் குடிக்கும் நீர், விவசாயத்திற்கு இலவசமாக பெற்றுக்கொள்ளும் நீர் அனைத்திற்கும் பணம் கொடுத்து பெறவேண்டிய நிலை ஏற்படப்புாகின்றது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் வெளிநாட்டு கொள்கையாகும்.

அது மாத்திரமல்ல இந்த அரசாங்கம் வைத்தியசாலைகள் அனைத்தையும் தனியார் மயமாக்க திட்டங்களை தீட்டுகின்றனர். எதிர் காலத்தில் இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் மருத்துவத்தை பணம் கொடுத்து பெறவேண்டும். மருத்துவத்தின் அனைத்து விடயங்களிற்கும் பணம் செலுத்த வேண்டி வரும். அதேபோன்றுதான் கல்விக்கும் நடைபெறப்போகின்றது. இவர்களின் வெளிநாட்டு கொள்கையினால் எதிர்காலத்தில் அனைத்தையும் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும்.