(ஆர்.யசி)

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்துவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பிரதான கட்சிகள் எவ்வாறு முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். 

அத்துடன் நாளை வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

கடந்த சில தினங்களாக பிரதான கட்சிகள் தமது தேர்தல்  நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி  சில காரணிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி மற்றும் 1 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானம் எடுக்கவும், தமிழர்களின் தீர்வுகள் விடயத்தில் தொடர்ச்சியாக சகல தரப்புடனும் பேசி வருவதன் காரணத்தினால் பொறுமையாக தமிழர் தரப்புகள் தமது நிலைப்பாடுகளை ஆராய முடியும் எனவும் கலந்துரையாடிவுள்ளனர். 

மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே இன்று வரையில் அவர்கள் தமிழர் தரப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து தமது நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் ஏனைய கட்சிகள் என்ன கூறுகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும் என கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இதன்போது தெரிவித்துள்ளனர்.