(இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்தது. இதன்  காரணமாக தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாவலபிட்டி  நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி  ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் அனைத்து தகவல்கள் கிடைத்தும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களின் வாக்கும், ஆதரவும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில்  எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் தாக்கம் பாரதூரமானது.

மத்திய வங்கியின்  பிணைமுறி மோசடி  தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளார்கள். தேசிய வளங்களை நாம் விற்பதாக குற்றஞ்சாட்டிய அரசாங்கமே இன்று தேசிய வளங்களை  பிறருக்கு தாரை வார்க்கின்றது. 

இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.