(இராஜதுரை ஹஷhன்)
பெருந்தோட்ட மக்களுக்கு தீபாவளி முற்பணமாக தேயிலை சபையிலிருந்து 5000 ரூபாவை வழங்க கூடாது என்று நான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை. அரசாங்கம் தனது இயலாமையினை பிறர் மீது சுமத்தி தப்பித்துக் கொள்கின்றது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினை உருவாக்கி மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காண்பேன் என பாராளுமன்ற. உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
நாவலபிடிய நகரில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா வழங்குவதாக குறிப்பிட்டவர்கள் இன்று காணாமலாக்கப்பட்டுள்ளார்கள் மறுபுறம் தீபாவளி பண்டிகை முற்பணமாக 15000 ரூபாவை வழங்குவதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் அதுவும் தடைப்பட்டுள்ளது. நான் தான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்து 5000 ரூபாவை வழங்க வேண்டாம் என்று குறிப்பிட்டதாக போலியான கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன.
இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வினவிய போது அவர் பெருந்தோட்ட மக்களுக்கு தீபாவளி கொடுப்பனவு வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அரசாங்கம் தனது இயலாமையினை பிறர் மீது குற்றஞ்சாட்டி மறைத்துக் கொள்கின்றது. தீபாவளிக்கு முன்னர் மக்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவினை வழங்க வேண்டும், என்றார்.