(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஏப்ரல் தாக்குதல்தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை மறுப்பதற்கான குற்றச்சாட்டே என்மீதான பொய் பிரசாரமாகும். சுயநல அரசியல் நோக்கில் ஒருவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவது நல்லதில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல்தாரிகளுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து சில புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தொலைக்காட்சி ஊடகமொன்றும் நான் தற்கொலைதாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை பார்வையிடச்சென்றதை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் நான் ரகசியமானமுறையில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச்செல்லவில்லை. பாதிக்கப்பட்ட அனைவரையும் பார்வையிட்டேன். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எனது எமது தூய்மையான அரசியலுக்கு சேறுபூசும் செயலாகும். தேர்தல் ஒன்று இடம்பெற இருக்கும் நிலையிலே இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அரசியல்வாதிகள் பொதுவாக அனைவருடன் கைகோர்த்து கதைப்பது சாதாரண விடயமாகும். அதன் பிரகாரமே நான் காத்தான்குடி பிரதேசத்தில் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த இடத்தில் சஹ்ரான் என்பவரும் இருந்தார். 

சஹ்ரானுடன் அனைவரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கின்றனர். அவருடன் நான் கைகொடுத்து கதைக்கும் படத்தை வெளியிடும் ஊடகம், எனக்கு பக்கத்தில் இருந்த நபரின் படத்தை மறைத்தே அந்த செய்தி வெளிப்பட்டிருந்தது. அந்த நபர்தான் தற்போது பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர்.

அத்துடன் சஹ்ரான் பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்டவர் என ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னரே எமக்கும் தெரியும். பொலிஸாருக்குகூட இது தெரியாமலே இருந்தது.

அத்துடன் எனக்கு எதிராக பொய்க்குற்றச்சாட்டுக்களை தெரிவித்தவர்தான் இப்ழார் என்பவர். அவர் ஒரு பொய்யர். பொதுஜன பெரமுனவுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு இந்த கொந்தராத்தை மேற்கொண்டிருக்கின்றார். அவர் பொதுஜன பெரமுன தலைவர்களுடன் இருப்பதை ஆதாரத்துடன் எனக்கு தெரிவிக்கலாம்.

மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது அதில் சாதாரண உறுப்பினராகவே நான் இருந்தேன். ஆனால் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் பிரதான நபராக இருந்தவர் பேராசிரியர் ஜீ.எல்,பீரிஸ். அவர் தற்போது பொதுஜன பெரமுனவில்தான் இருக்கின்றார்.

எனவே தேர்தல் இடம்பெறும் காலத்தில் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை பரப்பி எமது அரசியல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். 

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.