கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கியசந்தேகநபர்களான  இரு கடற்படை அதிகாரிகள் கிழக்குமாகாணத்தில் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என நம்பகரமாக தெரியவருவதாக கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில்  குற்றம்சாட்டப்பட்டுள்ள  சுமித் ரணசிங்க மற்றும் டீகேபி தசநாயக்க  ஆகிய இரு அதிகாரிகளே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ள இருவரும் கிழக்கு மாகாணத்தி;ல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக  அங்கு தமக்கு பணியுள்ளதாக தெரிவித்து சென்றுள்ளனர்.

தசநாயக்கவும் ரணசிங்கவும் கிழக்கு மாகாணத்தை நன்கு அறிந்தவர்கள் அவர்கள் அங்கு பணியாற்றியுள்ளனர் திருகோணமலையை நன்கு அறிந்தவர்கள் என நம்பகதன்மை வாய்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் அணியினருடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

எனினும் இருவரினதும் இந்த நடவடிக்கை குறித்து இலங்கை கடற்படை தலைமைக்கு தெரிந்துள்ளது  என  கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.இருவரும் கிழக்கிற்கு ஏன் செல்லவிரும்பினர் என சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரியும் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

2010 ஜனாதிபதி தேர்தலில் இரு கடற்படை அதிகாரிகளும் மகிந்த ராஜபக்சவிற்கு சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் சட்டங்களின் கீழ்  முப்படையில் உள்ளவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது  தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.