லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.சி.சி.யின் தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை ஏற்றதையடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகின்றார்.

கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக போட்டிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது. 

இதன்போது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அளித்த பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சங்கக்கார, பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஐ.சி.சி. போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராயவுள்ளார்.

எவ்வாறெறினும் எம்.சி.சி. நிர்வாகம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டால் குமார் சங்கக்காரவும் புறப்படுவதற்கு ஆயத்தமாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.