சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஆதித்ய வர்மா’. இசை அமைப்பாளர் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஆர் பி சவுத்ரி, காட்ரகட்ட பிரசாத் மற்றும் நடிகர் சீயான் விக்ரம், படத்தின் நாயகன் துருவ் விக்ரம், நாயகிகள் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இவ்விழாவில் அறிமுக நடிகர் துருவ் விக்ரம் தெரிவிக்கையில்,

“என்னுடைய ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை பார்த்துவிட்டு என்னை மேடைக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. உங்களால் மட்டுமே இந்த மேடையில் நிற்கிறேன். இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்புக்குச் செல்லும்போது நான் யாருடனும் பேசவில்லை.

ஆனால் இயக்குநர் கிரிசய்யா போன்ற நல்லதொரு படைப்பாளிகள் கையில் இந்தப்படம் கிடைத்திருப்பதால் மகிழ்ந்தேன். என் அப்பா விக்ரம் பற்றிப் பேச வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்துக்காக அவர் தன்னுடைய படங்களையும் தாண்டி, மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

என் அப்பா ஒரு நல்ல நடிகர் எனத் தெரியும். ஒரு நடிகராக என்னை இயக்கவில்லை. அப்பாவாகவே என்னை இயக்கினார். அவர் இல்லாமல் நான் இல்லை.

நீங்கள் திரையில் பார்க்கும் என் பேச்சு, நடை, நடிப்பு என அனைத்தும் எங்க அப்பா தான். நீங்கள் பார்ப்பது அப்பாவுடைய இன்னொரு அவதாரம் தான். அவருக்கு 22 வயது இருந்தால் என்ன செய் திருப்பாரோ அதைத்தான் என்னைச் செய்ய வைத்துள்ளார். என்னுடைய அப்பா அம்மாவினால் மட்டுமே நான் இங்கே இருக்கிறேன். என் அப்பாவை நான் பெருமைப்படுத்த நினைக்கிறேன். அதனால் மட்டுமே இந்தத் துறையில் இருக்கிறேன்.” என்றார்.