இந்தியாவில் நாகை மாவட்டத்தில், கஜா புயலால் வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

தமிழகத்தில், 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ‘நாகை மாவட்டத்தில் வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்’ என, நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கோடியக்கரை, ஈசனூர், வெள்ளப்பள்ளம், ஆலங்குடி, கோயில்பத்து மற்றும் நாலுவேலுபதி கிராமங்களைச் சேர்ந்த 10 குடும்பத்தினருக்கு, தலா 218 சதுர அடியில், 1.85 லட்சம் ரூபாய் செலவில் கொன்கிறீட் வீடுகள் கட்டும் பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது.

தற்போது, கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், பயனாளிகளை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்த ரஜினிகாந்த், புதிய வீடுகளுக்கான சாவியையும், அதனுடன் ஒரு குத்து விளக்கும் அவர்களிடம் வழங்கினார். வீடுகளை பெற்றுக்கொண்டவர்கள், ரஜினிக்கும், ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.