சீனாவில் நடைபெறும் உலக இராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் 7 ஆவது உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு, இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், 2008ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி இடது காலை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.