தாய்லாந்து மன்னர் சில மாதங்களிற்கு முன்னர் தனது புதிய மனைவி என அறிவித்த தனது மெய்ப்பாதுகாவலர் பெண்மணிக்கு வழங்கப்பட்டிருந்த பதவிகளையும் கௌரவங்களையும் உடனடியாக இரத்துசெய்துள்ளார்.

தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி மன்னருக்கு எதிராக விசுவாசமில்லாத விதத்திலும்  தவறான விதத்திலும் நடந்துகொண்டதன் காரணமாகவே அவரிற்கு வழங்கப்பட்ட பதவிகள் கௌரவங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரண்மனையின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து மன்னரின் மனைவியின் நடவடிக்கைகள் அவமானத்தை ஏற்படுத்துபவை  என கருதப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து மன்னர்  மகாராணி சுதிதாவை தனது நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்ட பின்னர் யூலை மாதத்தில்  சினீனத் வோங்வஜிரபக்தியை உத்தியோகபூர்வ மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதேவேளை தாய்லாந்து மகாராணியின் தரத்திற்கு தன்னை உயர்த்த முயன்றமைக்காகவே அவரிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேஜர் ஜெனரல் சினீனத் ஒரு பயிற்சி பெற்ற விமானவோட்டி என்பதுடன்  மன்னரின் தாதியாகவும் மெய்ப்பாதுகாவலராகவும் விளங்கியவர்.

இதேவேளை தாய்லாந்தின் புதிய மகாராணியை அறிவிப்பதற்கான முயற்சிகளை  சினீனத் கடுமையாக எதிர்த்தார் தடுக்க முயன்றார் என  அரண்மனை தெரிவித்துள்ளது.

அரண்மனையை எதிர்காலத்தில் பாதிக்ககூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் அழுத்தங்களை குறைப்பதற்காகவுமே மன்னர் சினீனத்திற்கு புதிய மனைவி என்ற அந்தஸ்த்தை வழங்கினார் என அரண்மனை தெரிவித்துள்ளது.

எனினும் சினீனத் மன்னரையும் மகாராணியையும் எதிர்த்தார் மன்னரின் சார்பில் உத்தரவு வழங்குவதற்கு தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்தார் எனவும் தாய்லாந்து அரண்மனை தெரிவித்துள்ளது.