பூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் வளம்நிறைந்த அழகிய கிராமமாகவும் அதிக மண் வளம் நிறைந்த பூர்வீக கிராமமாக 3000 வருடங்களாக மக்கள் வாழ்ந்து வரும் இடமாகவும் கௌதாரிமுனை திகழ்கின்றது.

பூர்வீக ஆலயமாக இருக்கும் மண்ணித்தலை சிவன் ஆலயம் இக் கிராமத்துக்கு பெருமை சேர்ப்பதோடு தொன்மை வாய்ந்த கிராமமாக திகழ்கின்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த நிலையிலும் தற்பொழுது இக்கிராமத்தில் 135 குடும்பங்களே வசித்து வருகின்றார்கள்.

இக் கிராமத்தில் காணப்படும் இயற்கை வளங்களை சுரண்டும் பல்வேறு முயற்சிகள் பல்வேறுபட்ட தரப்பினராலும் மேற்கொள்ளப்படுவதோடு மக்களுக்கு அற்ப ஆசைகளை காட்டி அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி கவனத்தை திசை திருப்பி அவ்விடங்களை அபகரிக்க பலர் முயற்சிக்கின்றனர்.

இலங்கையிலேயே சில இடங்களிலேயே காணப்படும் மண் வளம் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படுவதாலும் அழகான கடற்கரை சூழல் காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பப்படுகின்ற இடமாக இது காணப்படுகின்றது.

மேலும் பிரதேச மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிந்தநிலையில் குறித்த பிரதேச மக்களுடன் கலந்துரையாடி கௌதாரிமுனையின் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டு குறித்த பகுதிகளில் முதலீடுசெய்ய விரும்பும் முதலீட்டாளர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாகவும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இயற்கை வளங்களை பாதுகாப்பான முறையில் கையாளும் வகையில் ஏதாவது முதலீடுகளை மேற்கொள்ள முடியுமா என சிறப்பு குழு ஒன்று அமைத்து அவர்களுடைய ஆய்வறிக்கை பெற்று மேலதிக நடவடிக்கை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.