புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2233 குடும்பங்களைச் சேர்ந்த 7633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே கூடுதலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 49 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வெள்ளம் மற்றும் சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்தார்.

மேலும் வெள்ளம் மற்றும் மழை காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களின் உதவியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான சமைத்த உணவு, நீர் என்பனவற்றை அந்தந்தப் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நேற்று திங்கட்கிழமை காலை முதல் பெய்த அடை மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த குளங்கள் திறந்துவிடப்பட்டன.

இதனால், குளங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தன.

அத்தோடு, கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரத்மல்யாய பிரதேசத்தில் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் மேவிப்பாய்ந்தமையால் அவ்வீதியூடாக பயணித்த பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

புத்தளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வர்த்தக நிலையங்களும் மந்தகதியில் காணப்பட்டன. நேற்று திங்கட்கிழமை புத்தளத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டன.