(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து அனைத்து தகவலும் கைவசம் இருந்தும் அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளைப் பெறும் நோக்கில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து பாரம்பரிய சாதாரண இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் வழங்கிய தகவல்களை ஏன் கருத்தில் கொள்ளவில்லை. தெற்கில் இனக்கலவரத்தை ஏற்படுத்திய பிரேமதாச யுகம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தெற்கில் இனக்கலவரத்தை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகம் வேண்டுமா என்ற கேள்விக்கு பெரும்பாலான மக்கள் வேண்டாம் என்ற பதிலையே வழங்குகின்றார்கள். ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தந்தையின் நிர்வாகத்தையே முன்னெடுத்து செல்வதாகக் குறிப்பிடுகின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
30 வருட கால யுத்தம் பாரிய போராட்டத்துக்கு மத்தியில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் அரசியல் பழிவாங்கலுக்காக தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து அனைத்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளைக் கருத்திற் கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
பயங்கரவாத தாக்குதல் குறித்து சாதாரண முஸ்லிம் மக்கள் வழங்கிய செய்திகளை ஏன் செயற்படுத்தவில்லை? முறையற்றவர்களின் தேவைகளினால் பாரம்பரிய முஸ்லிம் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாதிகள் தொடர்பில் சாதாரண பாரம்பரிய முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் வழங்கிய தகவல்கள் ஏதும் கவனத்திற் கொள்ளவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம் அமைச்சர்களினதும் ஆளுநர்களினதும் பணிப்புரைக்காக விடுவிக்கப்பட்டார்கள். இவ்விடயம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
தேர்தல் மேடைகளில் கொள்கையற்ற அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பவரை நாட்டு மக்கள் ஒருபோதும் ஜனாதிபதியாக்க மாட்டார்கள். தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும்.
பொருளாதாரமும், தேசிய உற்பத்திகளும் கடந்த காலத்தை விட தற்போது தொடர்ந்து வீழ்ச்சி நிலையையே அடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அனைத்தும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன. ஆனால் ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தனக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லாத வகையிலே போலியான தேர்தல் வாக்குறுதிகளையே வழங்குகின்றார். போலியான வாக்குறுதிகளுக்கு நாட்டு மக்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் அனைத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் தொடர்ந்து துணைபோயுள்ளார்கள். தற்போது மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திலிருந்து விலகி அரசாங்கத்தைத் தூற்றுவதால் எவ்வித மாற்றமும் இனி ஏற்படாது. முறையற்ற நிர்வாகத்தை முன்னெடுத்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள்.
அரச நிர்வாகத்தை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடியாத கட்சிக்கும், ஜனாதிபதி வேட்பாளருக்கும் மக்களாணையை வழங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது. மக்கள் மனங்களை வென்றவரையே ஜனாதிபதி வேட்பாள ராகக் களமிறக்கியுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு தகுந்த பாடத்தை நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் கற்பிப்பார்கள். பொதுஜன பெரமுன அனைத்து தரப்பினரையும் ஒருமுகப்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM