இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக முக்கிய ஆதாரங்களை ஐசிசி கண்டுபிடித்துள்ளதை தொடர்ந்து அவர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ திலங்கசுமதிபாலவிற்கு தடை விதித்துள்ள நிலையிலேயே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சிடம் ஐசிசி கையளித்துள்ள அறிக்கையொன்றில் திலங்கசுமதிபாலவிற்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஒப்பந்தம் செய்துகொண்ட ஒலிபரப்பு நிறுவனமொன்று 1997இல் திலங்க சுமதிபபாலவின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிட்டதாக தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிட்டளவு பணத்தை அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரிற்கு என வழங்கியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

வேர்ல்ட்டெல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் மஸ்கெரன்கஸ் என்பவரே இந்த பணத்தை வழங்கியுள்ளார்.அவர் 2002 இல் இந்தியாவில் இடம்பெற்ற கார்விபத்தில் பலியானார்.

அவ்வேளை திலங்க சுமதிபால இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் துணை தலைவராக பதவி வகித்தார்.

இதேவேளை திலங்கசுமதிபாலவின் நெருங்கிய நண்பரான கிளென் பால்மர் 20 வருடங்களிற்கு முன்ன நடந்த பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

திலங்க சுமதிபால சூதாட்டதொழில்துறையுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார் என ஐசிசியின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை திலங்க சுமதிபால நிராகரித்துள்ளார்.

நான் ஐக்கியதேசிய கட்சிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்த பின்னர் அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் எனக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்  ஐக்கியதேசிய கட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.