முஸ்லீம்களை சீற்றப்படுத்தும் விதத்தில் வெளியான முகநூல் பதிவினால் ஏற்பட்ட கலவரத்தினால் பங்களாதேசில் நால்வர் பலியாகியுள்ளனர்.

முகமது நபியை விமர்சிக்கும் விதத்தில் வெளியான முகநூல் பதிவே கலவரத்தை தூண்டியுள்ளது.

இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேசின் போலாமாவட்டத்தில் உள்ள பொர்கானுடின் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை தவிர எங்களிற்கு வேறு வழியிருக்கவில்லை என காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த இந்து ஒருவரின் முகநூல் பதிவின் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.

தனது முகநூலிற்குள் ஊடுருவியவர்களே இந்த பதிவிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட முகநூல் பதிவு குறித்த செய்தி பரவத்தொடங்கியதும் காவல்துறையினர் மதத்தலைவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தவேளை  கலவரம் வெடித்துள்ளது.

சீற்றத்துடன் பொதுமக்கள் காவல்துறை அலுவலகத்தின் முன்னாள் குழுமி நீதி கோரியுள்ளனர்,அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றமடைந்து காவல்துறையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை காவல்துறையினர் வீசதொடங்கினர் இதன் பின்னர் அவர்கள் காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள தொடங்கினர் அவர்கள் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே வரத்தொடங்கினர் இதன் பின்னரே துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டிருக்காவிட்டால் எங்கள் தலைகளை கற்களால் சிதைத்திருப்பார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே வந்திருந்தால் நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம் என காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிலர் தன்னை மிரட்டியதாகவும் தான் கப்பம் தராவிட்டால் முகநூலிற்குள் நுழைந்து ஆபத்தான விடயங்களை பதிவிடப்போவதாகவும் முகநூலிற்கு சொந்தமான இந்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை முகநூலிற்குள் ஊடுருவி குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.