இரை உண்ண முடியாமல் அவதிப்பட்ட பசுவின் வயிற்றில் இருந்த சுமார் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக் கழக வைத்தியர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.

தமிழகத்தின் சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவர், ஆறு மாதங்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றை வாங்கியுள்ள நிலையில், அந்த பசு, கடந்த 20 நாட்களுக்கு முன் கன்று ஈன்றது. தினமும், 3 லிட்டர் பால் கறந்து வந்த நிலையில், சில நாட்களாக புல், வைக்கோல் என்பனவற்றை உண்ண முடியாமலும், சிறுநீர், சாணம் வெளியேற்ற முடியாமலும் அவதிப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருமுல்லைவாயலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டுசென்றனர். அங்கு, பசுவை பரிசோதித்த வைத்தியர்கள், 'மிகவும் ஆபத்தான நிலையில் பசு இருப்பதாகவும், வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்குச் செல்லுங்கள்' எனக்கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 18ம் திகதி வேப்பேரிக்கு பசுவை கொண்டு சென்றார் முனிரத்தினம்.

அங்கு, பசுவின் உடலை ஸ்கேன் செய்து  பார்த்தபோது, பசுவின் வயிற்றில் செரிமானம் ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அறுவைச் சிகிச்சை செய்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வைத்தியர்கள் முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, காலை 11 மணிக்கு ஆரம்பித்த அறுவைச் சிகிச்சை, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. அதில், பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதயம், கல்லீரல் உள்ளிட்ட முக்கியமான பாகங்களை பாதிக்கக்கூடிய ஆபத்தான பொருட்களும் அகற்றப்பட்டன.அதன்பின்னர், வெல்லம், தவிடு, இயற்கை பொருட்களால் தயாரான மருந்தை பசுவுக்கு கொடுத்து, அசை போட வைத்தனர்.

“பிளாஸ்டிக் பயன்பாட்டால், மண்ணுக்கு மட்டுமல்ல, உயிர்களுக்கும் எந்த அளவு ஆபத்து ஏற்படுகிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.