சிறிது காலத்­துக்கு முன் ரணில் ஒரு விட­யத்தைக் கூறி­யி­ருந்தார். அதா­வது எனது மாமா ஜே.ஆர். போட்ட முடிச்சை என்னால் அவிழ்க்க முடியும். அதை அவர் எனக்கு சொல்லித் தந்­தி­ருக்­கிறார் என்றார். அது என்ன முடிச்சு-? அது தான் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை மூலம் நாட்டின் அனைத்து நிர்­வாகக் கட்­ட­மைப்­பு­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தே­யாகும். அப்­போது இதனால் ஏற்­படும் சாத­கங்கள் மட்­டுமே பிர­தா­ன­மாக நோக்­கப்­பட்­டன.

திறந்த பொரு­ளா­தா­ரத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இது பெரிதும் உத­வி­யது. நாட்டின் நிர்­வா­கத்தை ஒருமுகப்­ப­டுத்த இது இன்­றி­ய­மை­யா­த­தாக அமைந்­தது.

ஜே.வி.பி.யின் கிளர்ச்­சி­யையும் வடக்கு– கிழக்கு தமிழ் ஆயுதக் குழுக்­களின் போராட்­டத்­தையும் சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது.எதிர்க்­கட்­சி­கள் தலை தூக்­காமல் முட­மாக வைத்­தி­ருக்க இது உத­வி­யது.

திறந்த பொரு­ளா­தா­ர­மா­யினும், அதற்கும் கட்­டுப்­பாடு அமைந்­தி­ருக்க வேண் டும். அதற்கு மாறான கட்­டுப்­பா­டற்ற திறந்த பொரு­ளா­தா­ரத்தால் தான் கலா­சார சீர­ழிவும் போதைப்­பொ­ருளின் வியா­பிப்பும் பண மோச­டி­களும் விப­சாரப் பெருக்­கமும் கொள்ளை, வழிப்­பறி, கொலை, பாதாள  உலக அட்­டூ­ழி­யங்கள் பெருகி மக்கள் பிரதி­நி­தி­களும் உல்­லா­ச­மாக வாழ்­கி­றார்கள். அவர்­களும் விலை போகி­றார்கள். பேரம் பேசப்­ப­டு­கி­றார்கள். ஜன­நா­யக மரபு சீர­ழிந்­தது.

நாட்டின் நிர்­வாகம் ஒருமுகப்­ப­டுத்­தப்­பட்­டதால் சிறு­பான்­மை­க­ளுக்­கான அதி­கா­ரப்­ப­ரவல் கேள்­விக்­கு­றி­யாகி பெரும்­பான்­மையின் தாளத்­துக்கே ஆட வேண்­டி­ய­தா­யிற்று. இதனால் சிறு­பான்­மைகள் தனி­ வழி ஏகினர். ஜே.வி.பி. ஒடுக்­கப்­பட்டு சக­வாழ்­வுக்கு கொண்டுவரப்­பட்­ட ­போதும் வடக்கு– கிழக்கு தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் போராட்டம் வீறிட்­டெழ அடிப்­ப­டை­யாக அமைந்­தது. எதிர்க்­கட்­சிகள் ஒடுக்கி வைக்­கப்­பட்­டதால் ஜன­நா­யக உரி­மைகள் யாவும் சிக்கி சீர­ழிந்­தன. சர்­வா­தி­காரம் தலை தூக்­கி­யது. பிரே­ம­தா­ச வும் ரணிலும் ஜே.ஆருக்கு அப்­போது ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்கள் என்­றாலும் கூட, இப்­போது ஜே.ஆரின் மரு­ம­கனும் பிரே­ம­தா­சவின் மகனும் அந்த முடிச்சை அவிழ்க்க கடு­மை­யாகப் போரா­டு­வது ஒரு சரித்­திர நிகழ்­வே­யாகும். தனி மனித நிறை­வேற்று அதி­காரம் என்னும் முடிச்சை அவிழ்க்க முடி­யா­த­வாறு ஜே.ஆர். பல­மாக இறுக்கி நாலு கட்­டு­களைப் போட்­டி­ருந்தார். 1977ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்­தலில் ஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யாக 168 ஆச­னங்­களில் 140 ஆச­னங்­களைப் பெற்றே அந்த அத்­தனை எம்.பிக்­க­ளி­ட­மி­ருந்தும் திக­தி­யி­டப்­ப­டாத இரா­ஜி­னாமா கடி­தங்­களை ஒப்­பங்­க­ளோடு பெற்று அவர் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை  உரு­வாக்­கி­யி­ருந்தார். அதை அவர் நீடித்து நிலை­யாக வைத்­தி­ருப்­ப­தற்­காக தக்க விதி­மு­றை­க­ளையும் இயற்றி வைத்தே இருந்தார். ஆரம்­பத்தில் ரணில் இதை அறி­யா­த­போதும் இப்­போது தெளிவு பெற்­றி­ருக்­கிறார்.

இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கென புதிய யாப்பை இயற்­று­வ­திலும் கூட மூன்றில் இரண்டு பங்கும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் தடை எனக் கூறிக் கொண்டு அதி­கா­ரப்­ப­ர­வலை வழங்­கா­தி­ருக்க முடி­யுமா? உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் நாட்டைப் பாதிப்­புள்­ளாக்­கி­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு மூன்றில் இரண்டு பங்­கையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பையும் சாட்­டாக முன்­வைத்துக் கொண்­டி­ருக்க முடி­யுமா? அதனால் தான் சர்­வ­தேச அழுத்­தத்­தாலும் உள்­நாட்டு நிர்ப்­பந்­தத்­தாலும் உத்­தேச புதிய யாப்பை இயற்றும் தேவை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. ஜே. ஆரின்  முடிச்சால் ஐ.தே.க.வும் பாதிக்­கப்­பட்­ட­தா­லேயே ரணி­லுக்கு விளங்­கி­யது. இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­காக அதை வடி­வ­மைப்­ப­தில்தான் இப்­போது பௌத்த சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் எதிர்ப்பை  சமா­ளிக்கும் நிலை அர­சுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதை இலா­வ­க­மாகக் கையாண்டே அரசு சாதிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. உண்­மையில் சிங்­கள மக்­களும் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னா­லன்றி தனி­யாக தமிழ் மக்கள் மட்­டுமே இதை சாதித்துக் கொள்­ளவும் முடி­யாது.

எனவே தேர்­தலை பகிஷ்­க­ரிக்­கா­மலும் தனித்­துக்­ கேட்டுப் பிரிக்­கா­மலும் இணக்­க­மான வேட்­பா­ளரை தமிழர் தெரிவு செய்தே வாக்­க­ளிக்க வேண்டும். பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையைக் கொண்ட கட்­சிக்கு ஜனா­தி­ப­தி ­ப­தவி கிடைத்தால் தான் எதிர்பார்ப்­பு­களை முன்­வைக்க வாய்ப்பு ஏற்­படும் என்­ப­தையும் கவ­னத்தில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

ஜே.ஆர். அவி­ழ்க்க முடி­யாது போட்ட முடிச்­சுக்கள் என்ன தெரி­யுமா?

*தனி நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை அகற்­று­வ­தெனில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அவ­சியம். விகி­தா­சாரத் தேர்தல் முறையில் அது அமை­யுமா-?

*சர்வஜன வாக்­கெ­டுப்பு மூலமும் அங்­கீ­காரம் பெற வேண்டும். சிறு­பான்­மைகள் விட­யத்தில் இது சாத்­தி­யமா?

*விகி­தா­சார முறை­யி­லான தேர்தல் வேண்டும்.

*அதன் வெட்­டுப்­புள்ளி 12 – 5 என வேண்டும்.

விகி­தா­சா­ரத் ­தேர்தல் முறையில் எந்தக் கட்­சிக்கும் மூன்றில் இரண்டு கிடைக்­குமா? சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அங்­கீ­காரம் கிடைப்­பது சாத்­தி­யமா? 12.5 வெட்­டுப்­புள்ளி அமை­யு­மாயின் சிறு­பான்மைக் கட்­சி­களும் சிறு­பான்­மை­களும் பிர­தி­நி­தித்­துவம் பெறு­வது சாத்­தி­யமா? அஷ்ரப் 1988ஆம் ஆண்டு பிரே­ம­தா­ச­வுடன் பேசி 12.5  வெட்­டுப்­புள்­ளியை 5 ஆகக் குறைத்­ததால் தான் தற்­போது சிறு­பான்மைக் கட்­சி­களும்  சிறு ­கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்தில் இல­கு­வாக ஆச­னங்­களைப் பெற­ மு­டி­கி­றது. சிறு­பான்மை இதைத் தக்க வைக்க இணைந்து போராட வேண்டும். இத­னா­லேயே மீண்டும் 12.5 வீத வெட்­டுப்­புள்­ளியைக் கொண்டு வரு­மாறு பௌத்த சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் சார்­பாக விஜ­ய­தாச ராஜபக் ஷ

எம்.பி. தனி­நபர் பிரே­ர­ணையை கொண்டு வர முனை­கிறார். தொகுதி நிர்­ணயம், அகழ்­வா­ராய்ச்சி, காணி அப­க­ரிப்பு, திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள், ஊர்  பெயர் மாற்றம், கண்ட கண்ட இடங்­களில் சிலைகள் நிறு­வுதல் ஆகி­ய­வற்றின் மூலம் சிறு­பான்­மைகள் சீர­ழிக்­கப்­பட்டு கொண்­டி­ருக்­கி­றார்கள். இவற்­றுக்­கெ­தி­ராக சிறு­பான்­மைகள் ஒன்­றி­ணைய வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ரணில் பொது வேட்­பா­ள­ராக்கி வெற்றி பெறச் செய்­ததன் மூலம் பின்­வரும் மாற்­றங்­களை செய்­தி­ருந்தார்.  இது ரணிலின் ஆரம்பப் படி­வ­மாகும்.

*18ஆம் ஷரத்தின் தனி வலி­மை­யோடு காணப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­க­டித்­தி­ருந்தார்.

*பாரா­ளு­மன்­றத்தின் ஏகோ­பித்த அனு­ம­தி­யோடு 19 ஆம் ஷரத்தை நிறை­வேற்­றி­யி­ருந்தார்.

*பொதுத் தேர்­தலில் வெற்றி பெறும் வலி­மையைப் பெற்றார்.

*ஜன­நா­யக சுயா­தீ­னக் ­கு­ழுக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

*ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்­றத்­தோடு பகிர்ந்­தி­ருந்தார்.

*குறைந்த ஆச­னங்­க­ளோடு தான் பிர­தமர் ஆகி­யி­ருந்தார்.

*இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான புதிய யாப்பை இயற்றும் பொருட்டு பாரா­ளு­மன்­றத்தை யாப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றி­யி­ருந்தார்.

*ஐ.நாவோடு உடன்­பாடு கண்டு போர்க்­குற்ற விலக்கு பெறு­வ­தற்­காக குற்­றத்தை ஏற்­றுக்­கொள்­ளவும், பொறுப்புக் கூறலைப் பெற்றுக் கொள்­ளவும் இணை அனு­ச­ர­ணைக்கு உட்­பட்டு 30/1 ஆம், 34-/1 ஆம் நிபந்­த­னை­க­ளுக்கு உடன்­பாடு கண்டார்.

*இவற்றின் மூலம் சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணை­யி­லி­ருந்தும் தண்­ட­னை­யி­லி­ருந்தும் நாட்­டை ­தக்க வைத்தார்.

எனினும் அவர் தெரிவு செய்து ஜனா­தி­ப­தி­யாக்­கி­யி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன எல்­லா­ வி­ட­யங்­க­ளிலும் இவ­ருக்கு முட்­டுக்­கட்­டை­யா­கவே இருந்து குழப்­பிக் ­கொண்­டி­ருந்தார்.

ஆரம்­பத்தில் அவர் பெற்­றி­ருந்த முக்­கி­யத்­துவம் போகப்­போக அடி­யோடு குறைந்­தே­ போ­னது. அந்த வகையில் அவரும் இணைந்­தி­ருந்­ததால் தான் ரணிலால் பின்­வரும் விட­யங்­களை சாதிக்க முடிந்­தி­ருந்­தது.

*மஹிந்த ராஜபக் ஷவை ஜனா­தி­பதித் தேர்லில் தோற்­க­டித்­தமை.

*ஏகோ­பித்து 19 ஆம் ஷரத்தை நிறை­வேற்­றி­யமை.

*ஜன­நா­யக சுயா­தீனக் குழுக்­களை ஏற்­ப­டுத்­தி­யமை.

பின்பு இவர் இம்­மூன்­றுக்கும் எதி­ரா­கவே செயற்­பட்டார். இடையில் மஹிந்­த­வோடு நெருக்­க­மாகப் புழங்­கிக்­கொண்டு செயற்­பட்டார். இவர் அவரைத் தோற்­க­டிக்க ஐக்­கிய தேசியக் கட்­சியை நாடி வென்­று­விட்டு அவ­ரது கட்சித் தலை­மை­யையும் கேட்­டுப்­பெற்ற பின் அவ­ரோடு ஏன் நெருக்கம்? தன்னை வெல்ல வைத்த ரணி­லையே அகற்றி விட்டு சிறிது காலம் மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கி­னாரே. இதற்­கா­கவா அவரைத் தோற்­க­டித்தார். கட்சித் தலை­மையைப் பொறுப்­பேற்­றி­ருந்தார்.

பின்னால் மைத்­திரி ஒரு­முறை 19ஆம் ஷரத்து என்றால் என்ன? அது எனக்குத் தெரி­யாதே என்­றாரே? அதைத் தெரி­யா­மலா தனது கட்­சியைச் சேர்ந்த 96 எம்.பி.க்­க­ளையும் ஏகோ­பித்து அதற்கு வாக்­க­ளிக்கச் செய்தார்? பாது­காப்பு, சூழல், மகா­வலி என்னும் மூன்று அமைச்­சுகள் மட்­டுமே தனக்கு அதற்­குப் பின் எந்த ஜனா­தி­ப­திக்கும் எந்த அமைச்சும் இல்லை என்னும் நிலையில் மேல­தி­க­மாக சட்ட ஒழுங்கு அமைச்­சையும் கேட்டுப் பெற்றுக் கொண்டு நீதி­ய­மைச்சின் அனு­ம­தி­யையும் கோராமல் ஞான­சா­ரரை விடு­தலை செய்­தாரே. இவை ஆணைக்­கு­ழுக்­களின் சுயா­தீ­னத்தை மீறிய செயற்­பா­டுகள் அல்­லவா? இவர்தான்

19 ஆம் ஷரத்து இயற்­றப்­பட்­ட­வுடன் பெரு­மி­த­மாக, உலகில் நானே இருந்த அதி­கா­ரங்­களைக் குறைத்துக் கொண்ட ஆட்­சி­யாளன் எனக் கூ­றி­யவர். எனினும் இவ­ரது செயற்­பா­டுகள் அதற்கு மாறா­ன­வை­யா­கவே இருந்­தன. தான் மூன்று அமைச்­சுக்­களை வைத்துக் கொண்டு தன்­னோ­டி­ருந்த தனது கட்­சிக்­கா­ரர்­களை அமைச்­ச­ர­வையில் இடம்பெறச் செய்து விட்டே அதி­கா­ரத்தில் பாதியைக் குறைத்து விட்டேன் எனக் கூறி­யி­ருந்தார். பிர­த­மரைக் கோராமல் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­தாரே? மக்கள் ஆணைக்கு மாறாக தான் விரும்­பி­ய­வரை இடையில் பிர­த­ம­ராக்­கி­னாரே? ரணிலைப் பிர­த­ம­ராக்­கவே மாட்டேன் என்­றாரே? கரு­வையும் சஜித்­தையும் பிர­தமர் பத­விக்கு அழைத்­தாரே. பாரா­ளு­மன்­றத்­தோடு இவர் தனது அதி­கா­ரங்­களைக் குறைத்துக் கொண்ட செயற்­பா­டு­களா இவை?

ஆச­னத்­தொகை குறைத்­தி­ருந்த ரணிலை இவர் வென்­றதும் பிர­த­ம­ராக்­கி­யது 19ஆம் ஷரத்­துக்கு முன்­பி­ருந்த நிலை. அது அப்­போ­தி­ருந்த முழு­மை­யான தனி மனித நிறை­வேற்று அதி­கா­ரத்தில் செல்­லு­ப­டி­யாகும். 19 ஆம் ஷரத்­துப்­படி அது முடி­யாது. இதை அறி­யா­மலா இடையில் 19 ஆம் ஷரத்­துக்குப் பின் ஆச­னத்­தொகை குறைந்த மஹிந்­தவை, மைத்­திரி பிர­த­ம­ராக்­கினார். இது 19 ஆம் ஷரத்­துக்கு மாற்றம் என உயர் நீதி­மன்றம் பொருட்­கோடல் செய்த பிறகு தான் இவ­ருக்கு விஷயம் தெளி­வா­கி­யி­ருந்­தது. பாரா­ளு­மன்றம் ஏகோ­பித்து நிறை­வேற்­றிய 19 ஆம் ஷரத்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு எப்­படி தெரி­யாமற் போனது?

2015 ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பாளர் என்னும் மன நிலை­யில்தான் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்சித் தலை­வ­ரான மஹிந்த  ராஜபக் ஷவை எதிர்த்தார். பின்னர் மஹிந்த ராஜபக் ஷவி­ட­மி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையைப் பெற்ற பின் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியை எதிர்க்கும் மனநிலைக்கு ஆளானார். இவரும் ரணிலும் 40 ஆண்­டு­க­ளுக்கும் மேல் அர­சியல் அனு­பவம் உள்­ள­வர்கள். தனித் தனிக் கட்­சி­களில் ஊறித் திளைத்­த­வர்கள்.

இதற்கு முன் இரு பெரும் தேசியக் கட்­சி­களும் எப்­போதும் கூட்­ட­ரசு செய்­ததும் இல்லை. அந்த வகையில் ஒரு கட்­சியை சேர்ந்­த­வரை பொது வேட்பாளராக நிய­மித்­தி­ருக்கக் கூடாது. காரணம் இவரால் பொது வேட்பாளராக செயற்­ப­டவே முடி­யாது. நெடு நாட்கள் கட்சி ரீதியில் செயற்­பட்டு விட்டு ஒரு நாழி­கைக்குள் அதை மாற்­றி­விட முடி­யுமா? மைத்­திரி 2015ஆம் ஆண்டு மஹிந்­தவை விட்டும் பிரிந்து கட்­சியின் உறுப்­பு­ரி­மையை வைத்துக் கொண்டே ரணி­லுடன் சேர்ந்து பொது வேட்பாளராகி கட்சி சார்­பாக போட்­டி­யிட்ட மஹிந்­தவைத் தோற்­க­டித்­த­தாலும் வென்ற பின் மூன்றில் ஒரு பங்கு ஆச­னங்­களைக் கொண்ட ரணிலைப் பிர­த­ம­ராக்கி 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற பின்­புலம் வகுத்­த­தாலும் அதற்­காக இத்­தேர்­தலில் யார் வெற்றி பெற்­றாலும் நான் தான் பிர­த­மரை நிய­மிப்பேன் எனக் கூறி வாக்­கா­ளரை மயக்க நிலையில் வைத்­த­தாலும் பின்பு அவ­ரது கட்சி 96 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்தும் கூட 106 ஆ­சனங்­களைப் பெற்ற ஐக்­கிய தேசி­யக் ­கட்­சிக்கு அறுதிப் பெரும்­பான்மை சேர்க்க 96 எம்.பி.க்களில் தனக்கு சார்­பான சிலரை ரணி­லுடன் அமைச்­ச­ர­வையில் சேர்த்து விட்டு கூட்­ட­ரசு அமைத்­த­தாலும் கட்­சியில் முக்காற் பங்­கினர் மஹிந்­தவின் பக்கம் சாய்ந்­தனர்.

அறுதிப் பெரும்­பான்­மைக்கு 113 ஆச­னங்கள் தேவை. 106 ஆச­னங்கள் அறுதிப் பெரும்­பான்­மை­யாக ஆகாது. அதற்கு 7 ஆச­னங்கள் குறைவு. ஆளும் கட்­சியும் எதிர்க்­கட்­சியும் இணைந்த ஆட்சி என இது அமைந்­ததால் ஆகவும் குறை­வான ஆச­னங்­களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே எதிர்க்­கட்சித் தலை­மையைப் பெற்­றது. 96 எம்.பி.க்கள் இவ­ரது கட்­சியிலிருந்தும் கூட நான்கில் ஒரு பங்­கி­னரே இவ­ரோடு இருந்­தனர். மற்ற மூன்று பங்­கினர் மஹிந்­த­வோடு இருந்­தனர். எனினும் ஜனா­தி­ப­திக்கே தலைமை எனக் கட்­சியின் யாப்பில் இருந்­ததால் மைத்­தி­ரிபால சிறி­சே­ன­வி­ட­மி­ருந்து அதை மீளப் பெறு­வது மஹிந்­த­வுக்கு சாத்­தி­ய­மா­ன­தல்ல. இதன் கார­ண­மா­கவே பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியை உரு­வாக்கி மஹிந்த தரப்­பினர் அதன் தலை­மையை அவ­ரிடம் வழங்­கினர்.

இந்­நிலை ஏற்­ப­டப்­போ­வதை அறிந்­து தான் ஒரு­முறை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 96 எம்.பி.க்களும் ஒன்று சேர்ந்து வந்தால் ஆட்­சியைத் தருவேன் எனக் கூறினார். அக்­கட்சி அறுதிப் பெரும்­பான்மை பெறு­வ­தாயின் மேலும் 17 ஆச­னங்கள் தேவை. அவற்றை எப்­படிப் பெறு­வது? மைத்­தி­ரியை அவர்­களால் நம்­பவும் முடி­ய­வில்லை. இந்­நி­லை­யில்தான் அவர் தனது சொல்லை நிரூ­பிக்க மஹிந்­தவைப் பிர­த­ம­ராக்கி, ரணிலைப் பத­வியை விட்டும் நீக்­கினார்.

ரணில் பாரா­ளு­மன்ற பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு மூன்று நாட்­க­ளாகத் தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்டார். மஹிந்த அறுதிப் பெரும்­பான்­மையை அமைத்துக் கொள்ளத் தொட­ராக வாய்ப்பும் வழங்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து வரு­வோ­ருக்கு எல்லா வச­தி­களும் வழங்­கப்­பட்­டன. தொட­ராக அமைச்­சர்­களும் பத­வி­யேற்­றனர். சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரிய கடு­மை­யாக முயன்று பல­முறை ரணிலின் பெரும்­பான்­மையை நிரூ­பித்­த­தோடு உயர் நீதி­மன்­றத்தில் 19ஆம் ஷரத்­துக்­கான பொருட்­கோ­ட­லின்­படி மீண்டும் ரணில் பிர­த­ம­ரானார். தற்­போது மைத்­திரி தலைமை வகிக்கும் கட்­சிக்கே பாரா­ளு­மன்­றத்தில் 96 ஆச­னங்கள் இருக்­கின்­றன. எனினும் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உட்­பட பலர் பொது­ஜன ஐக்­கிய பெர­மு­னவின் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்­றனர். அப்­ப­டி­யானால் ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருக்­கி­றது என்­பதே பொரு­ளாகும். இப்­படி எதிர்க்­கட்­சி­யாக இருந்து கொண்டு அவரும் அமைச்­சு­களை வகிக்­கின்­றாரே. இந்­நி­லையில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் எதிர்க்­கட்சித் தலை­மையை வகிக்க முடி­யுமா?

2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொது­ஜன ஐக்­கிய முன்­னணி போட்­டி­யி­ட­வில்லை. எனினும் இக்­கட்­சி யில் இப்­போது பலர் எம்.பி.க்களாக இருக்­கின்­றார்கள். இது எப்­படி? இவர்­களும் தமது கட்சி உறுப்­பி­னர்­களே என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சபா­நா­ய­க­ரிடம் உறு­திப்­ப­டுத்­தி­யதே கார­ண­மாகும். மஹிந்­தவை பிர­த­ம­ராக்கும் தனது முனைப்பு நிறை­வே­றா­த­தா­லேயே அவரை சமா­ளிக்க மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­விதம் செய்­தி­ருக்­கலாம். இதனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் இருந்த எதிர்க்­கட்சித் தலைமை மஹிந்­த­வுக்குப் போனது. ஆரம்­பத்தில் ரணி­லோ­டி­ருந்த மைத்­தி­ரியின் நெருக்கம் பின்பு மஹிந்­த­வோடு ஏற்­பட்­டதே இதற்குக் கார­ண­மாகும்.  2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால ஸ்ரீல.சு. கட்­சி­யி­லி­ருந்து கொள்கை ரீதியில் மாற­வில்லை. வலியக் கிடைக்கும் உத­விக்காகவும் பத­விக்காகவுமே வில­கினார் என்­றா­கி­றது. ரணில், மைத்­திரி ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­காக உத­வி­யது ஏன்? மைத்­தி­ரிக்கு உத­வு­வ­தற்­காக அல்ல மஹிந்­தவின் வலி­மையை எடை­ போடும் பரீட்­சை­யே­ ஆகும்.

அப்­போது நிறை­வேற்று அதி­கா­ரத்­துடன் 18 ஆம் ஷரத்தின் கீழ் நீதி, பொலிஸ், தேர்தல், அரச ஊழியர் ஆகிய அதி­கா­ரங்­களும் பொருந்­திய மஹிந்­த­வு­ட­னேயே எவ்­வித சாத­னங்­களும் அற்ற மைத்­திரி போட்­டி­யிட வேண்­டி­யி­ருந்­தது. அவர் அச்­சத்­தோடு ரணிலின் அடைக்­க­லத்தில் தான் இருந்தார். அவ­ரது வீட்­டாரும் உறைந்து போயி­ருந்­தனர். உண்­மையில் அந்தத் தேர்­தலில் அவர் தோல்­வி­யுற்­றி­ருந்தால் ஆழ­மான குழியில் உயி­ரோடு புதைக்­கப்­பட்­டி­ருப்பேன் என்றே வெற்றி பெற்ற பின் குறிப்­பிட்­டி­ருந்தார். எனினும் அண்­மையில் அதை தேர்தல் வெற்­றிக்­கா­கவே சொன்னேன் எனக் கூறி மழுப்­பி­யி­ருந்தார்.

தற்­போது இவர், நிக­ழ­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்லில் நடு நிலை­யாக இருப்பேன் என்­கிறார். எனினும் இவ­ரது கட்­சியின் செய­லா­ளரும் தேசிய அமைப்­பா­ளரும் மஹிந்த தலைமை ஏற்­றி­ருக்கும் பொது­ஜன எக்சத் பெர­மு­னவில் இவ­ரது கட்­சி­யையும் இணைத்து விட்­டி­ருக்­கி­றார்கள். இக்­கட்­சியின் முக்­கிய ஆலோ­ச­க­ரான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் கருத்­துகள் இவ­ராலும் கட்­சி­யி­ன­ராலும் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இக்­கட்சி தனித்துப் போட்­டி­யிட்­டேனும் இத்­தேர்­தலில் தனது இருப்­பையும் அடை­யா­ளத்­தையும் தக்­க­வைத்துக் கொள்ள வேண்டும் என்­பதே சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் விருப்­ப­மாகும். தற்­போது பின்­வ­ரு­மாறு இக்­கட்­சி­யினர் பிள­வுண்­டுள்­ளனர்.

*மைத்­தி­ரி­பால சிறி­சேன (நடு நிலையா?)

*குமார வெல்­கம எம்.பி. (அசல் ­கட்சி)

*சந்­தி­ரிகா பண்­டார­நா­யக்க (அசல் ­கட்சி)

*தயா­சிறி ஜய­சே­கர (மஹிந்த சார்பு)

*சில தொகுதி அமைப்­பா­ளர்கள் (சஜித் சார்பு)

இவ்­வா­றெல்லாம் இக்­கட்சி சிதை­வுற என்ன காரணம்?

17 ஆண்­டு­க­ளாகத் தோல்­வி­யுற்­றி­ருந்த இக்­கட்­சியை 1988 ஆம் ஆண்டு முதல் மீள எழுப்பி ஆட்­சிக்குக் கொண்டு வந்த சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் தலைமைப் பத­விக்கு நிகழ்ந்­தது என்ன? 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கென அவரால் நிய­மிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்­றதும் ஜனா­தி­ப­தியே தலை­வரும் என சட்­டத்தை இயற்றி சந்­தி­ரி­காவை ஓரம் கட்­டி ­விட்டார்.

அந்தச் சட்­டத்தைப் பயன்­ப­டுத்­தியே மைத்­திரி ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் உத­வியால் பொது வேட்பாளராக போட்­டி ­யிட்டு 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வென்­றதும் கட்சி உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வில­க­வில்லை எனக் ­கா­ரணம் காட்டி தலை­மையை ஏற்றுக் கொண்­டி­ருந்தார்.

2015 ஆம் ஆண்­டி­லி­ருந்தே பாது­காப்பு அமைச்­சையும் தன் கைவசம் வைத்­தி­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சிறிது காலத்­துக்கு முன் பொலிஸ் துறைக்குப் பொறுப்­பான சட்ட ஒழுங்கு அமைச்­சையும் கேட்டுப் பெற்றார் அல்­லவா? அண்­மையில் அரச தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளையும் பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கி வரு­கையில் இந்த நட­வ­டிக்கை எதற்கு?

தற்­போது நிக­ழ­வி­ருக்கும் சுயா­தீன தேர்தல் குழுவின் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பொலிஸ் துறைக்குப் பொறுப்­பான சட்ட ஒழுங்கு அமைச்சு கையேற்பும், அரச தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளுக்­கான கையேற்பும் இடை­யூ­றாக அமை­யாதா? பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன்  விஜ­ய­வர்­த­ன­வுக்கும் அறி­விக்­கா­ம­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ரவின் பேரில் பாது­காப்பு அமைச்சு அதைக் கையேற்­றி­ருக்­கி­றது.

தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­ப­டு­கையில் இரு­ பெரும் தேசியக் கட்­சி­யினர் மத்­தி­யிலும் குழப்பம் ஏற்­ப­டா­தி­ருக்­கவா இவர் தன்­வசம் பாது­காப்பு அமைச்­சையும் சட்ட ஒழுங்கு அமைச்­சையும் அரச தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளையும் வைத்­தி­ருக்­கிறார். இரு தரப்­புக்கும் இவர் மீது நம்­பிக்­கை­யில்­லாத நிலையில் அது சாத்­தி­யமா? உண்­மையில் 19ஆம் ஷரத்­துப்­படி 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெல்­ப­வ­ருக்கு எந்த அமைச்சும் இல்லை. இரா­ணு­வத்­துக்குப் பொறுப்­பான பாது­காப்பு அமைச்சும் இல்லை. பொலி­ஸுக்குப் பொறுப்­பான சட்ட ஒழுங்கு அமைச்சும் இல்லை. அப்­ப­டி­யானால் நிறை­வேற்று அதி­காரம் இருக்கிறதா? அப்படியானால் எதற்காக வென்றவுடன் சரத் பொன்சே காவை பாதுகாப்பு உயர் பதவியில் அமர்த் துவேன் என சஜித் குறிப்பிடுகிறார்-? ஜனாதிபதி நாட்டின் தலைவர், அரசின் தலைவர், பாதுகாப்பின் தலைவர் என்னும் வகையில் பாராளுமன்றத்தின் விருப்பைக் கோராமல் எவரையும் சுயமாக நியமிக்க முடியுமா?

பாராளுமன்றத்தின் சுய விருப்பின்றி எவரையும் சுயமாக அவரால் நியமிக்க முடியாது. எனினும் ரணிலின் விருப்பு இதில் கிடைக்கும் என்பதால் இது சாத்தியமாகி விடும். நான் ஜனாதிபதியானதும் சிறையிலுள்ள படையினரை விடுவித்துவிடுவேன் எனக் கூறுகிறார் கோத்தபாய. இது பாராளுமன்ற அனுமதியின்றி சாத்தியப்படுமா? சுயாதீன நீதிக்குழுவின் அதிகாரத்தோடும் இது சம்பந்தப்படுகிறது. ஆக மஹிந்த ராஜபக் ஷவின் 18ஆம் ஷரத்தால் இது சாத்தியப்படும். அதே மனநிலையே இப்போதும் காணப்படுவது தெளிவாகிறது.

ரணில் 19ஆம் ஷரத்தின் மூலம் ஜே. ஆரின் முடிச்சையும் மஹிந்தவின் 18ஆம் ஷரத்திலான இறுக்கமான முடிச்சையும் தளர்த்த மட்டுமே செய்திருக்கிறார். பாராளுமன்றத்தின் ஏகோபித்த ஆதரவோடு 19ஆம் ஷரத்தை அவர் நிறைவேற செய்திருப்பதே பெரும் சாதனையாகும். முதல் சுற்றில் பாதிப்பலன் கிடைத்திருக்கிறது. காரணம் அந்த முடிச்சுகளை முழுதாக ஒரேயடியாக அவிழ்ப்பதென்பது இலேசான விடயமல்ல. அதற்கான அடுத்த சுற்றைத்தான் அவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்கு அவர் பின்வரும் விடயங்களை செய்து முடிக்க வேண்டியிருக்கிறது.

*பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றாக வேண்டும்.

*அதன் மூலம் புதிய யாப்பை இயற்ற வேண்டும்.

*அந்த யாப்பு மூலம் தனி நபர் நிறை வேற்று அதிகாரத்தை பாராளுமன்றம் பொறுப்பேற்க வேண்டும்.

*இதனால் நாட்டின் தலைவர், அரசின் தலைவர், பாதுகாப்பின் தலைவர் என்னும் முகாமைத்துவம் மட்டுமே ஜனாதிபதிக்கு கிடைப்பதோடு எந்த அமைச்சும் கிடைக்காது.

*பாராளுமன்றம் மூலமே அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதால் இனி ஜனாதிபதித் தேர்தலுக்கான நிலைப்பாடு இருக்காது.

இந்த ஜனநாயக முன்னெடுப்பு சாத்தியமாக அனைத்து மக்களும் இணைந்து பங்களிக்க வேண்டும்.

ஏ.ஜே.எம். நிழாம்