(நா.தனுஜா)

ரொபேட் முகாபேயின் பயணத்தை முன்னெடுக்கும் ஒருவர் எமக்குத் தேவையில்லை. மாறாக நெல்சன் மண்டேலாவின் பயணத்தை மேற்கொள்ளும் ஒருவரே நாட்டிற்கு அவசியம் அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இன்றளவில் முஸ்லிம் மக்கள் விருப்புடன் வாக்களிக்கத்தக்க, முழு நாட்டிற்குமே சிறந்த ஆதர்சமாக விளங்கும் வேட்பாளராக சஜித் பிரேமதாச உள்ள போதிலும் அவருக்குக் கிடைக்கக்கூடிய முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எதிர்த்தரப்பினரால் திட்டமிட்டு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். 

அதேபோன்று தனி ஈழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு, தப்பியோடிய வரதராஜப்பெருமாளை இன்று யார் தம்மோடு இணைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இராணுவத்தினரையும், பொதுமக்களையும் கொன்ற பிள்ளையான், கருணாஅம்மான் போன்றோர் யார் பக்கம் நிற்கின்றார்கள்? இவற்றிலிருந்தே கோத்தபாய ராஜபக்ஷ தரப்பானது சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் தரப்பு என்பது தெளிவாகின்றது. 

அவர்களுடன் இணைந்து பயணித்தால் சிம்பாவேயில் ரொபேட் முகாபே தலைமையில் உருவாக்கப்பட்டதைப் போன்ற ஆட்சியை வேண்டுமானால் ஸ்தாபிக்க முடியும். முகாபேயின் வழித்தடத்தைப் பின்பற்றியே கோத்தபாய ராஜபக்ஷ செல்வதற்கு முயற்சிக்கின்றார். 

முகாபேயின் பயணத்தை முன்னெடுக்கும் ஒருவர் எமக்குத் தேவையில்லை. மாறாக நெல்சன் மண்டேலாவின் பயணத்தை மேற்கொள்ளும் ஒருவரே நாட்டிற்கு அவசியம் என்றும் அவர் இதன்போது கூறினார்.