ஜப்பானிய பேரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை ஜப்பான் பயணமானார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 21 பேர் கொண்ட குழுவுடன் டி.ஜி. - 308 என்ற தாய்  ஏர்லைன்ஸில் புறப்பட்டு சென்றுள்ளார். 

ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி ஜப்பானுக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பல உலகத் தலைவர்கள் பங்குபற்றும் இவ்விழா நாளை பிற்பகல் டோக்கியோ நகரில் உள்ள இம்பீரியல் அரச மாளிகையில் இடம்பெறவுள்ளது. 

விழாவை தொடர்ந்து இடம்பெறவுள்ள புதிய பேரரசர், அரச தலைவர்களுக்கான விருந்துபசார நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயையும் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் நாட்டின் பேரரசராக உள்ள அகிஹித்தோ பேரரசர் முப்பது வருடங்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் தனது பதவியிலிருந்து விலகிக்கொண்டார். 1817ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறு தனது பதவியை விட்டு விலகிய முதலாவது ஜப்பானிய பேரரசராக இவர் உள்ளார். 2019 மே மாதம் முதலாம் ஆம் திகதி முடிக்குரிய இளவரசரான நருஹிதோ ஜப்பானின் 126 ஆவது பேரரசராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.