கட்சியில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை இந்நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமீயூ முஹம்மது பஸ்மி தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முதலாவது  விசேட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.10.2019) மதியம் இடம் பெற்றது.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் இன, மத பேதமின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும், சிங்களவர்கள் ,முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்ற வேறு பாடுகள் இன்றி எல்லோரும் சேர்ந்து அவரை வெற்றி அடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்நாட்டின் முக்கியத்துவம் என்னவென்றால் , தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரு கட்சியே  ஐக்கிய தேசிய கட்சி. எனவே இக்கட்சி சார்பாக போட்டியிடும் சஜித்தை வெற்றிப்பெற செய்ய நாம்  அனைவரும் ஒன்று திரண்டு அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். 

குறித்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட முகாமையாளர் ஜே.பி.கொஸ்தா , அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதின் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதோடு, சஜித் பிரேமதாசவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வை முன்னாள் அமைச்சர்  ரி.எம்.சுவாமிநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.