(செ.தேன்மொழி)

குளியாபிட்டி மற்றும் வீரம்புகெதர பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குளியாபிட்டி - கிரிந்தெவ வீதியில் கொன்கஹகெதர பகுதியில் சாரதியின் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாதையிலிருந்து விலகிச் சென்று கம்பம் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

எலப்பதெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அஞ்சன மதுக்க பதிரண என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை வீரம்புகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகல் - நீர்கொழும்பு வீதியில் புளூபிட்டியிலிருந்து நாரம்மல நோக்கி சென்ற கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த காரின் சாரதியும் அவரது மனைவியும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மடவல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கயான் ஹர்ஷண பாலசூரிய மற்றும் 30 வயதுடைய சஜீதா மனோஹாரீ கம்லத் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.