ஜனா­தி­பதித் தேர்­தலில் எம்­முன்னே இரண்டு தெரி­வு­களே உள்­ளன. இந்­நி­லையில் கோத்­தா­ப­ய­வுடன் ஒப்­பி­டு­கையில், சஜித் மேன்­மை­யா­ன­வ­ராக காணப்­ப­டு­கின்றார். அத்­துடன் மலையக மக்கள் ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வுக்கு நன்­றிக்­கடன்பட்­ட­வர்கள் என்ற அடிப்­ப­டையில் பிர­தி­யு­ப­காரம் செய்­வ­தற்கும் சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ள­தாக மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வசதி மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகா­ரம்­பரம் வழங்­கிய செவ்­வி­யின்­போது இவ்­வாறு தெரி­வித்தார்.

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­துடன் நீங்கள் இணைந்து பணி­யாற்­றி­யி­ருக்கின்ற நிலையில்  தமக்­கான ஆத­ரவை அளிக்­கு­மாறு இம்­முறை உங்­க­ளி­டத்தில் கோர­வில்­லையா?

பதில்:- உத்­தி­யோகபூர்­வ­மாக எவ்­வி­த­மான அழைப்­புக்­க­ளையும் அவர்கள் விடுக்­க­வில்லை. தொலை­பேசி வாயி­லாக அணு­கி­னார்கள். இருப்­பினும், கடந்த நான்­கரை ஆண்­டு­க­ளாக ஐ.தே.மு.யில் அங்கம் வகித்து வரு­வ­தோடு மலை­யக மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான செயற்­றிட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­துள்ளோம். உதா­ர­ண­மாக, நில உரி­மையை பெற்­றுக்­கொ­டுக்கும் பணி ஆரம்­பிக்­கப்­பட்டு இந்­திய வீட்­டுத்­திட்ட உத­வி­யுடன் 15ஆயிரம் பய­னா­ளி­க­ளுக்கு வீடு­களை வழங்­கி­யுள்ளோம். இவ்­வாறு மிக முக்­கிய விட­யங்­களை ஐ.தே.முன்­னணி அர­சாங்­கத்­துடன் இணைந்து முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கையில் மாற்­றுத்­த­ரப்­பி­ன­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பது பற்றி சிந்­திக்­கவே முடி­யாது. ஆகவே நாம் அவ்­வா­றான முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­ப­தென தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஏக­ம­ன­தான தீர்­மா­னத்­தினை எடுப்­ப­தற்­கான அடிப்­படை காரணம் என்ன?

பதில்:- 1948ஆம் ஆண்­டுக்கு பின்னர் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்டு நாம் அநா­தை­க­ளாக்­கப்­பட்­ட­போது, 1988இல் சஜித் பிரே­ம­தா­ஸவின் தந்­தை­யா­ரான ரண­சிங்க பிரே­ம­தா­ஸவே சத்­தி­யக்­க­ட­தாசி மூல­மாக மீண்டும் வாக்­கு­ரி­மையை  பெற்­றுக்­கொ­டுத்தார். ஆகவே ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வுக்கு நாம் நன்­றிக்­கடன் பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்றோம். அந்த வகையில் அவ­ரு­டைய மக­னுக்கு பிர­தி­யு­ப­காரம் செய்­வது கட­மை­யா­கின்­றது.

கோத்­தா­பய பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்­த­போ­தான நிலை­மை­களை நான் கூறி மக்கள் அறிந்­து­கொள்ள வேண்­டி­ய­தில்லை. ஆகவே கோத்­தா­வுடன் ஒப்­பி­டு­கையில் சஜித் மேன்­மை­யா­ன­வ­ராக இருக்­கின்றார்.

கேள்வி:- சஜித் பிரே­ம­தா­ஸ­வி­டத்தில் மலை­யக மக்கள் சார்ந்து தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளீர்க்­க­வல்ல நிபந்­த­னை­களை விதித்­தி­ருக்­கின்­றீர்­களா?

பதில்:- நிபந்­த­னைகள் என்­பதை விடவும், எமது மக்கள் சார்ந்த கோரிக்­கை­க­ளையே முன்­வைத்­தி­ருக்­கின்றோம் என்றே கூற வேண்டும். எமது மக்கள் வாழ்­வா­தார ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றார்கள். அவற்­றுக்­கான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பதே எமது இலக்­காக இருக்­கின்­றது.

ஆகவே எமது மக்கள் சார்ந்து பத்­து அம்ச கோரிக்கைகள் எம்மால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவை அனைத்தும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நிச்­ச­ய­மாக உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்­ளன. குறிப்­பாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டுதல், தேசிய கொள்­கை­களின் கீழ் காணி­களை வழங்கல் உள்­ளிட்ட முக்­கிய பத்து விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணி­யப் ­போ­வ­தில்­லை­யென்றும் பௌத்த சிங்­கள சித்­தாந்­தத்­தினுள் நின்றும் கருத்­துக்­களை வெளி­யிடும் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் மீது எவ்­வ­ளவு தூரம் நம்­பிக்கை கொள்ள முடியும்?

பதில்:- சஜித் ஜனா­தி­ப­தி­யானால் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வ­ளிப்பார் என்று நாம் கூற­வில்லை. ஆனால் அவ­ரு­டைய தலை­மைத்­து­வத்தின் கீழ் மக்கள் இருப்­பார்­கள் ­ஜ­ன­நா­யக வெளியில் என்­பது உறு­தி­யான விட­ய­மா­கின்­றது. அவ­ரு­டைய தந்­தை­போன்று சிறு­பான்மை மக்கள் மீது அக்­க­றையும் அன்பும் கொண்­டி­ருப்பார் என்ற அதீத நம்­பிக்கை எமக்­குள்­ளது. இவ்­வா­றான பல விட­யங்­களை ஆராய்ந்து கொண்டே எமது கூட்­டணி ஏக­ம­ன­தான தீர்­மா­னத்­திற்கு வந்­துள்­ளது.

கேள்வி:- பழம்­பெரும் மலை­யகக் கட்­சி­யான இ.தொ.கா கோத்­தா­ப­யவை ஆத­ரிப்­ப­தாக அறி­வித்­துள்­ள­மை­யா­னது உங்­க­ளுக்கு சவா­லாக இருக்­கு­மென்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- 2004ஆம் ஆண்டு நான் அர­சி­ய­லுக்கு வந்­தி­ருந்தேன். அதன் பின்னர் பல பிரச்­சி­னை­களை சந்­தித்­தி­ருக்­கின்றேன். இ.தொ.காவிற்கு எதி­ராக புறப்­பட்ட அனைத்து மலை­யக பிர­தி­நி­தி­களும் குறு­கிய காலத்­தி­லேயே அவர்­களின் கால­டியில் சர­ண­டைந்­துள்­ளார்கள். தற்­போது வரையில் நான் அவ்­வா­றான நிலை­மைக்கு தள்­ளப்­ப­ட­வில்லை. எனது பிர­வே­சமும் அதன் பின்னர் உரு­வான கூட்­ட­ணியின் கார­ணத்­தி­னா­லேயே இ.தொ.கா அர­சியல் ரீதி­யாக வீழ்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­தது.

மக்­களும் அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து விடு­த­லை ­பெற்று சுயா­தீ­ன­மாக சிந்­தித்து செயற்­பட ஆரம்­பித்­தார்கள். எமது அர­சியல் பிர­வேசம் மலை­யக மக்­க­ளுக்கு நம்­பிக்­கையையும் சுதந்­தி­ரத்­தி­னையும் அளித்­துள்­ளது. கடந்த தேர்­த­லிலும் இ.தொ.கா மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வ­ளித்­த­போதும் மக்கள் ஆணை வழங்­க­வில்லை.  ஆகவே இ.தொ.காவை நாம் எமக்கு சவா­லாக கரு­த­வில்லை. மக்­களும் அவ்­வாறு நேர்­ம­றை­யாக சிந்­திக்க மாட்­டார்கள். பெரும்­பான்­மை­யான ஆத­ர­வினை சஜித்தே பெறுவார்.

கேள்வி:- ஐ.தே.க தலை­மை­யி­லான புதிய கூட்­ட­ணியில் இ.தொ.கா இணை­வ­தற்கு முயற்­சி­களை எடுத்­த­போது அதற்கு தடை­யாக உங்­க­ளது கூட்­டணி செயற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அவ்­வா­றில்லை. ஜனா­தி­பதித் தேர்­த­லொன்றே நடை­பெ­று­கின்­றது. பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்­றல்ல. இ.தொ.காவா­னது, ஐ.தே.கவுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யது. ஆனால் அவர்­களின் நலன்­களின் அடிப்­ப­டை­யிலே அது முன்­னெ­டுக்­கப்­பட்­டதால் வெற்றி பெற்­றி­ருக்­க­வில்லை. இ.தொ.கா கூட்­ட­ணியில் இணை­வதை நாம் எதிர்க்­க­வில்லை. அவ்­வாறு இணை­வதால் எமக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்றே கூறினோம். ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அனைத்து தலை­வர்­க­ளும் நாம் நேர்­மை­யான அர­சி­யலை செய்­கின்றோம் என்ற புரி­தலை கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

கேள்வி:- பிர­தமர் ரணி­லுக்கு ஜனா­தி­பதித் தேர்­தலில் வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கா­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில் :- எமது முன்­னணி நபர்கள் சார்ந்து முடி­வு­களை எடுக்­க­வில்லை. என்­னு­டைய தனிப்­பட்ட நிலைப்­பாட்டின் படி, பிர­தமர் ரணில் சிறு­பான்மை இனங்­களை அர­வ­ணைக்கும் சிறந்­த­தொரு தலை­வ­ராக காணப்­ப­டு­கின்றார். ஆனால் நாட்டில் இன­வாதம் வேரூன்றிக் காணப்­ப­டு­கின்­றது. சாதா­ரண பெரும்­பான்மை மக்­க­ளி­டத்தில் விதைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அவரால் பெரும்­பான்மை மக்­களின் மனதை வெல்ல முடி­யாத நிலைமை இருக்­கின்­றது. அத­னை­யிட்டு நான் கவ­லை­ய­டை­கின்றேன். ஜனா­தி­ப­தி­யாக வரு­வ­தென்றால் அனைத்து சமூ­கத்­தி­னதும் அங்­கீ­காரம் தேவை­யாக இருக்கின்றதல்­லவா? ஆகவே தான் சஜித் பிரே­ம­தாஸ முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ளார்.

கேள்வி:- கூட்டு ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­ப­டாத நிலைமை நீடிக்­கையில் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளப்­பி­ரச்­சினைக்கு எப்­போது தீர்வு கிட்டும்?  

பதில்:- கூட்டு ஒப்­பந்­த­மா­னது, தொழிற்­சங்­கங்­க­ளுக்கும், தனியார் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் நடை­பெ­று­கின்­ற­தொரு விட­ய­மாகும். தொழி­லா­ளர்கள் கோரும் சம்­ப­ளத்­தினை வழங்க முடி­யா­தென தனியார் கம்­ப­னிகள் கூறு­கின்­றன. அர­சாங்­க­மா­னது தனியார் கம்­ப­னி­க­ளுக்கு நிதியை வழங்க முடி­யாது. அவ்­வாறு வழங்­கு­வதில் சட்ட சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் தான் 50 ரூபா­வினை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்தும் அதனை செயற்­பாட்டு ரீதி­யாக முன்­னெ­டுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்தப் பிரச்­சி­னையை தற்­போது அர­சி­ய­லாக்கி விட்­டார்கள்.

50 ரூபா பற்றி பேசு­கின்­றார்கள். ஆனால் ஆயிரம் ரூபா சம்­பளம் சம்­பந்­த­மாக பேசு­வ­தில்லை. இந்த சம்­பளப் பிரச்­சினை நீடிப்­ப­தற்கு தொழி­லா­ளர்­களும் கார­ண­மா­கின்­றனர். ஏனெனில் தீர்­வினை பெற்­றுத்­த­ர­மு­டி­யாத தொழிற்­சங்­கத்தின் பின்னால் தொழி­லாளர் அணி திரள்­வதால் எவ்­வி­த­மான பய­னு­மில்லை. மேலும் இப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தானால் தேயிலை தோட்­டங்­களை பகிர்ந்­த­ளிக்க வேண்டும். அதனை விடுத்து தனியார் கம்­ப­னி­க­ளி­டத்தில் எதிர்­பார்த்­தி­ருப்­பதால் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை.

தற்­போது நாம் தீபா­வ­ளிக்­கான முற்­ப­ணத்­தினை சற்று அதி­க­ரித்து வழங்­கு­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை செய்து அதற்கு அமைச்­ச­ரவை அனு­ம­தியும் பெறப்­பட்­டுள்­ளது. கம்­ப­னிகள் வழங்கும் 10ஆயிரம் முற்­ப­ணத்­திற்கு அதி­க­மாக தேயிலை சபையின் நிதியின் ஊடாக தொழி­லா­ளர்­க­ளுக்கு ஐயா­யிரம் ரூபா மேல­தி­க­மாக கிடைக்­க­வுள்­ளது. ஆகவே தொழி­லாளி ஒருவர் 15ஆயிரம் ரூபா முற்­ப­ணத்­தினை இம்­முறை பெறு­வ­தற்கு வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

கேள்வி:- மலை­ய­கத்தில் 7பேர்ச் காணி­களை மக்­க­ளுக்கு பெற்­றுக்கொ­டுப்­பதில் தலை­யீ­டு­கள், தடைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அமைச்சர் நவீன் இந்த விட­யத்­தினை தனி­யாக செய்­ய­வில்லை. தொழிற்­சங்கத் தலை­வர்கள் நவீன் திஸா­நா­யக்­க­வினை பயன்­ப­டுத்தி எனக்கு எதி­ராக அர­சியல் ரீதி­யான நன்­மை­களை அடை­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள். அத­னை­விட தனிப்­பட்ட வகையில் அமைச்சர் நவீ­னுடன் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்லை.

கேள்வி:- 2015ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்­றத்தின் போது உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எவ்­வ­ளவு தூரம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன?

பதில்:- நாம் பிர­தேச சபை­களை தர­ மு­யர்த்தக் கோரினோம், நில ­உ­ரி­மையை, வீட்­டுத்­திட்­டங்­களை கோரினோம், சுகா­தார, கல்வி விட­யங்­களை முன்­னெ­டுக்க கோரினோம். அதி­கார சபையை கோரினோம். அவை அனைத்­துமே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆனால் முழுமை அடை­ய­வில்லை. இந்த விட­யங்கள் முழு­மை­ய­டை­கின்­ற­போது எமது மக்கள் வாழ்­வா­தார எழுச்­சியை காண்­பார்கள். ஆகவே இவ்­வி­ட­யங்­களை தொடர்ந்தும் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என்பதே எமது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

கேள்வி:- ஒரு கூட்டணியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர் என்ற அடிப்படையில் வடக்கில் ஐந்து கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களை ஏமாற்றியுள்ளது. தற்போதைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் ஆட்சிபலமும், தென்னிலங்கையில் தலைதூக்கியுள்ள இனவாதமும் அதற்கு தடைகளை ஏற்படுத்தி விட்டுள்ளன. ஆகவே எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாந்தவர்களாக இருக்கமுடியாது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைவதன் ஊடாகவே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

பிரிந்து நின்றால் எதனையுமே வெல்ல முடியாது. ஆகவே அவர்களின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் நிபந்தனைகளை முன்வைக்க, விளைவானது பின்னடைவுகளையே ஏற்படுத்தும். காரணம், தென்னிலங்கையில் வலுத்துள்ள இனவாதம் அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் தரப்பினை நிச்சயமாக தோல்வியுறவே செய்யும். ஆகவே அவர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை வெல்வதற்கு வேறொரு உபாயமார்க்கத்தினை பின்பற்றுவதே சாலச்சிறந்தது.

நேர்காணல் : ஆர்.ராம்