போலி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தந்த குடும்பத்தினரை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஈ.கே.-654 என்ற விமானத்தினூடாக இன்று காலை 5.40 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களிடம் விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது அவர்கள் வைத்திருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடவுச்சீட்டுகள் போலியானவை என கண்டு பிடிக்கப்பட்டது.

அது மாத்திரமல்லாது அவர்களிடமிருந்து சிரிய நாட்டு கடவுச்சீட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த குடும்பத்தினர் சிரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மேற்படி குடும்பத்தினை கைதுசெய்த அதிகாரிகள் அவரகள் வருகை தந்த விமானத்திலேயே அவர்களை நாடு கடத்தியுள்ளனர். 

29 வயதுடைய கணவரும், 28 வயதுடைய மனைவியும், அவர்களது குழந்தையுமே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.