புத்தளத்தில் பகல், இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் வீதியில் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, வன்னாத்தவில்லு பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட புத்தளம் - கொழும்பு பிரதான வீதி, பாலாவி - கற்பிட்டி பிரதான வீதி, புத்தளம் - எலுவங்குளம் வீதி, புத்தளம் - அநுராதபுரம் வீதி, புத்தளம் - குருநாகல் வீதிகளில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பகல், இரவு நேரங்களில் வீதியில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதுமாத்திரமின்றி, மதுரங்குளி, பாலாவி, நுரைச்சோலை, கற்பிட்டி, புத்தளம் நகர சுற்றுவட்டம், கரைத்தீவு, வன்னாத்தவில்லு உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் குறித்த வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக வீதியின் நடுவே தரித்து நிற்பது, படுத்துறங்குவது என்பவற்றால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, பகல் மற்றும் இரவு நேரங்களில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும் மற்றும் பொலிஸாரும் இணைந்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.