எதிர்வரும் 16 ஆம் திகதி சஜித் ஜனாதிபதியாக வருவதை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. என்பதை உறுதியாக தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்றையதினம் விஜயம் செய்த அவர் தேர்தல் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த வன்னி பிரதேசம் உட்பட வடக்கு கிழக்கில் வாழும் மூவின மக்களின் முன்னேற்றத்திற்கும் சஜித் பிரேமதாச தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்.இன்று அனைத்து சமூகமும் சுதந்திரமாக நடமாடும் சூழலை உருவாக்கிய பெருமை ஜக்கிய தேசிய கட்சியையே சாரும்.கோத்தாபயவிற்கு உங்கள் வாக்குகளை வழங்கினால் அந்த நிலமை  மாறிவிடும்.

முன்பு நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியும், வெள்ளைவான், கறுப்புவான் என்று மக்களை அச்சப்படுத்தியிருந்தார்கள். எனவே சஜித் பிரேமதாசவிற்கு வாக்கை செலுத்தினால் நாட்டின் பொருளாதார விருத்திக்கும், சுபீட்சமான வாழ்விற்கும் தனது தந்தையை போல எளிமையான, சிறப்பான பணியினை அவர் மக்களுக்கு ஆற்றுவார். 

அவர் இளமையாக இருப்பதால் அவரும், அவரோடு இருப்பவர்களும் வேகமாக பணிகளை செய்யமுடியும். எனவே அவரை நாட்டின் தலைவாராக மாற்ற வேண்டும் என்பது எனது கோரிக்கை. ஜக்கியதேசிய கட்சியில் பல சீர் சிருத்தங்களை செய்திருக்கிறோம். மக்களுக்காக சேவை செய்வதே எமது முதன்மை குறிக்கோள், எனவே எதிர்வரும் ஜந்து வருடங்களில் ஜக்கிய தேசிய கட்சி மூலம் பல்வேறு வேலை திட்டங்களை செய்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். 

எமது ஆட்சியில் இதுவரை 20718 வீடுகளை நாம் அமைத்திருக்கின்றோம். வாழ்வாதார உதவிகள், சுகாதார மேம்பாட்டுதிட்டங்கள், குடிநீர் வசதிகள், என பல முன்னேற்ற திட்டங்களை ஜக்கிய தேசியகட்சி மக்களுக்கு செய்துவந்திருக்கிறது. 

எனவே அதனை மனதிலே வைத்துக்கொண்டு தமிழர்களின் உறுதிக்காகவும், தமிழ்சமூகத்தின் எதிர்காலத்திற்காகவும் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு உங்கள் வாக்கினை வழங்க வேண்டும். 

அது உண்மையில் நடக்கும். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் ஜனாதிபதியாக வருவார் என்பதையும் இந்த மேடையிலே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதனை நிறுத்த யாராலும் முடியாது. என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.