அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையைப் பயன்படுத்துவதா? குஷ்பு

By Daya

19 Oct, 2019 | 03:34 PM
image

ராஜீவ்காந்தி கொலையைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என அகில இந்தியக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், முன்னணி தமிழ் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“சில நாட்களாகத் தமிழக அரசியல் களத்தில் ராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவம் விவாதிக்கப்படும் விதம் வேதனை அளிக்கிறது. நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசும் சீமானுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

கொலை செய்பவர்களும், கொலைக் குற்றவாளிகளும் தங்களுக்குச் சாதகமாக எதையாவது காரணத்தைத் தேடுவது இயல்பு. ஆனால் 7 பேர் விடுதலைக்காகப் பிரதமரைக் கொலை செய்ததைப் பெருமையாகப் பேசும் ஒவ்வொருவரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுதலை செய்யும் முடிவை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நிராகரித்து இருக்கிறார். இனிமேல் யார் என்ன சொல்ல முடியும்? இதற்குச் சட்டம்தான் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்பம் அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறி விட்டது.

ஆனால், அதற்கு மேல் நாடு என்று வரும் பொழுது, சட்டம் தான் இதனை முடிவு செய்யும். ராஜீவ்காந்தியோடு பழகியவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது தெரியும். மகாத்மா காந்தியோடு பழகியவர்களுக்கு அவரைப்பற்றித் தெரியும். அவர்கள் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே  இன்று இருந்தாலும் விடுதலை செய்யக் கூடாது என்று தான் சொல்வார்கள்.

அதே போல் தான் பணியாற்றியவர்கள், பழகியவர்கள் அவரை கொலை செய்தவர்களை விடுவிக்கக் கூடாது என்கிறார்கள். கட்சி ரீதியாக இந்த விவகாரத்தைப் பேசும் தகுதி காங்கிரஸிற்கு மட்டும்தான் உண்டு. ஏனெனில் அந்த கட்சி தங்கள் தலைவரை இழந்திருக்கிறது. தண்டனை வழங்கப்பட்டவர்கள் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இதற்குச் சட்டம்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right