(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் பந்தயம் பிடித்தல் ஆகிய குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் விளையாட்டுத்துறை சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி அல்லது 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சரின் சட்ட ஆலோசகர் பண்டுக கீர்த்தினந்த தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமயில் விளையாட்டுத்துறை அமைச்சின் மினி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சூதாட்ட நிலையங்களுடன் நேரடியாகவே மறைமுகமாகோ தொடர்புடையவர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் விளையாட்டுத்துறை சங்கங்களில் நிர்வாக உத்தியோகர்களாக பதவி வகிக்க முடியாது என்ற சட்டமும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கபட்டுள்ள சட்டமூலத்தில் அடங்குகின்றது. 

ஆசியாவிலேயே இலங்கையில்தான் இத்தகைய சட்டம் ஒன்று முதலாவதாகக் கொண்டுவரப்படவிருக்கின்றது எனவும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

மேலும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டுத்துறை சட்டம் அமுலில் உள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சிரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் பலரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களின் பின்னர் பரிந்துரைக்கபட்ட விடயங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கை ஆகியவற்றை சட்டமா அதிபரின் பார்வைக்கு சமர்ப்பித்து அவரது ஆலோசனை பெற்றே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகள் மற்றும் பந்தயம் பிடித்தல் ஆகியவற்றுக்கு எதிராக சட்டமூலம் கொண்டுவரப்படும்போது, விளையாட்டுத்துறையை நேசிக்கின்றவர்களும் விளையாட்டுத்துறையின் புனிதத்தன்மையை பாதுகாக்க முற்படுபவர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்பதில் சந்தேம் இல்லை என்றார்.