(நெவில் அன்தனி)

கிரிக்கெட் விளையாட்டு கொழும்புக்கும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பிற மாவட்டங்களிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் உள்ள கழகங்களில் விளையாடும் வீரர்களைக் கொண்டு 15 வீரர்கள் தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்படுகின்றார்கள். நாடு முழுவதும் கழக மட்ட கிரிக்கெட விஸ்தரிக்கப்பட்டால் இன்னும் அதிகமான வீரர்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் மினி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கைக்கு அமைய செயற்பட்டே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகம் சபிலும் நிறைவேற்றுக்குழுவிலும் பதவி வகிக்க முடியாதவாறு திலங்க சுமதிபாலவுக்கு தடைவிதிக்கப்பட்டது. 

எனினும் அமைச்சர் என்ற வகையில் நான் அவருக்கு தடைவிதிக்கவில்லை. மாறாக அவருக்கு தடை விதிக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையுடன் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இட்டேன். அது எனது கடமையும் கடப்பாடும் ஆகும். 

நான் சரியானவற்றை செய்து வசைபாடுகளை எதிர்கொள்ளத் தயார். மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் பதவிக்கு யார் வந்தாலும் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டை முக்கியமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம். விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு தேவையான நிதியை முழு அளிவில் ஒதுக்கிக்கொடுக்கத் தவறினால் கிரிக்கெட் மாத்திரமே செழிப்புடன் இருக்கும். ஏனைய விளையாட்டுக்களின் தரம் உயராது. 

எனவே விளையாட்டுத்துறைமீது அக்கறை கொண்டு, அதன் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்றார்.