சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் லயன்ஸ் 306 A1 தெற்கு கரையோர பிரதேசங்களில் சமூக நலன்புரி நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்தது.  இதன் கீழ் செல்லக் கதிர்காமம் மற்றும் பேருவளை பிரதேசங்களில் வெற்றிகரமான முறையில் சமூக நலன்புரி முகாம்கள் இரண்டை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.செல்லக்கதிர்காமம் மகா வித்தியாலயம் மற்றும் பேருவளை மாலேவன ஸ்ரீ ஞானேஸ்ஸர விகாரையில் நடைபெற்ற இந்த மக்கள் நலன்புரி முகாம்களில் 5000 இற்கும் அதிகமானோருக்குச் சேவை வழங்க முடிந்துள்ளது. இதன்போது விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலாக்க வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு நீரிழிவு பரிசோதனை மற்றும் பல நோய்களுக்கான சிகிச்சை, மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.மேலும் இவற்றுக்கு சமாந்தரமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கெனவும் பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதேவேளைக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தினால் ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், தொழிற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஆகியன முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் தொழிற்பயிற்சி பெற்ற 100 பேருக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்த லயன்ஸ் சமூக நலத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக பிள்ளைகளுக்காக ரோபோ தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவித்து பார்ப்பதற்கு இதன்போது வாய்ப்பளிக்கப்பட்டது. சர்வதேச லயன்ஸ் கழக மாவட்டம் 306 A1 இன் தலைவர் ஸ்ரீ லால் பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் இந்த ஆண்டு சமூக நலன்புரி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.சர்வதேச லயன்ஸ் கழகமானது உலக அளவில் கவனிக்கப்பட வேண்டிய சமூக சிக்கல்களின் 7 முக்கிய கூறுகளை அடையாளம் கண்டுள்ளது  எனவும் இதனைத் தீர்ப்பதை நோக்காக் கொண்டுள்ளதாகவும் லயன் ஸ்ரீ லால் பெர்னாண்டோ தெரிவித்தார்.நீரிழிவு நோய், பார்வைக் குறைபாடு, உணவு, சுற்றுச்சூழல், குழந்தை புற்றுநோய், மற்றும் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட மனிதாபிமான பிரச்சினைகள் மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 A1 இனால் முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் புற்றுநோயானது பல குழந்தைகள் உயிரிழக்கக் காரணமாக அமைந்துள்ளதுடன், இது தொடர்பிலான அவதானமின்மையே இதற்கான பிரதான காரணமாகும். மேலும் இதற்கான நிதிப்பற்றாக்குறையும் பிரதான காரணமாகும். எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு சர்வதேச லயன்ஸ் கழகம் முன்னின்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆண்டுதோறும், இலங்கையில் கண்புரை நோயால் 20000க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர், மேலும் இது எமது நாட்டில் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளில் முதன்மையானது. அனைத்து கண்புரை நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்க அரசுக்கு போதுமான வளங்கள் இல்லை மற்றும் நோயாளர்கள் நீண்டநாட்களுக்குக் காத்திருக்க வேண்டியும் உள்ளது.  இதைக் கருத்தில் கொண்டு, லயன்ஸ் கழகம் 306 A1 பாணந்துறையில் லயன்ஸ் கண் வைத்திய சாலையை நிறுவியுள்ளது, இது கண்புரை உள்ளிட்ட அனைத்து கண் பார்வை தொடர்பான குறைபாடு களையும் பூர்த்தி செய்கிறது ”என லயன் ஸ்ரீ லால் பெர்னாண்டோ தெரிவித்தார்.மேலும் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு, லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 A1 செப்டெம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதி  ‘லயன்ஸ் மார்ச்’ என்ற பெயரில் வாகன அணிவகுப்பை நடத்தவுள்ளது. அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்குபற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது கதிர்காமத்தில் ஆரம்பித்து கொழும்பு வரை பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.