எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

7 ஆவது 20:20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக களமிறங்க உள்ளன. 

எஞ்சிய 6 இடங்களுக்கான அணிகள், தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகுதி சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நடைறெவுள்ளது.

தகுதி சுற்றில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

‘ஏ’ பிரிவில் பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, கென்யா, பெர்முடா, சிங்கப்பூர் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஐக்கிய அரபு எமீரகம், அயர்லாந்து, ஹாங்காங், ஓமன், கனடா, நைஜீரியா,ஜெர்சி ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில், லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெறும்.

முதல் நாளான இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஸ்காட்லாந்து-சிங்கப்பூர் அணிகளும், ஹாங்காங்-அயர்லாந்து அணிகளும், கென்யா-நெதர்லாந்து அணிகளும், ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகளும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.