தளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ திரைப்படமும், பொக்ஸ் ஒபீஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி நடிக்கும் ‘கைதி ’ திரைப்படமும் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக, அதாவது ஒக்டோபர் 25 ஆம் திகதியன்றே வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களின் உதைபந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’.

சிறையிலிருந்து பத்தாண்டுகள் கழித்து வெளியே வரும் கார்த்தி, தன்னுடைய மகளையும், மனைவியும் பார்க்க விரும்புகிறார். அவரால் பார்க்க முடிந்ததா? இல்லையா? என்பதைப் பரபரப்பான எக்சனுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் கைதி. 

தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாகத் தளபதி விஜயுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

‘மாநகரம்’ என்ற படத்தை இயக்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புகழ் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கைதி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் கழித்து தன் மனைவியையும் மக்களை மகளையும் காணும் ஆவலில் சிறையிலிருந்து வெளியே வரும் கார்த்தி, ஒரிரவில் எதிர்கொள்ளும் சாகச சம்பவங்களை விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. 

இவ்விரண்டு திரைப்படங்கள்தான் தீபாவளி திருவிழாவிற்காக வெளியாகிறது. ஒக்டோபர் 27ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடும் நேரத்தில், அதற்கு முன்னதாக ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று இவ்விரு படங்களும் வெளியாகிறது.

இதனால் முதல் இரண்டு நாட்களும், இவ்விரண்டு திரைப்படங்களுக்கும் அவரது ரசிகர்கள் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.