ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெறவுள்ள மூன்றாவது டி-10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள் விளையாடவுள்ளனர்.

டி-20 கிரிக்கெட் லீக் போட்டியை அடுத்து டி-10 கிரிக்கெட் போட்டி பிரபலமாகி வருகிறது. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. 

இந்த ஆண்டுக்கான டி-10 லீக் தொடரானது அபுதாபியில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் கடந்த வருடம் இலங்கை அணியின் 6 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த வனிந்து ஹசரங்க, தசூன் சானக்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் பெரரா ஆகியோரும் அணிகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் லசித் மாலிங்க, தசூன் சானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய மூவர் மரதா அரேபியன்ஸ் அணிக்காகவும், நிரோஷன் டிக்வெல்ல டீம் அபுதாபி அணிக்கும், திசர பெரேரா பங்ளா டைகர்ஸ் அணிக்கும், பானுக்க ராஜபக்ஷ டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கும் மற்றும் குசல் பெரேரா டெல்லி புல்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.