(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.  இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு, முதலாவது விமான சேவையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் எயர் வந்து தரையிறங்கியது. எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72-600 விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாகத் தரையிறங்கியது.

இந்த விமானத்தில், எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி, அலையன்ஸ் எயர் தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா, உள்ளிட்ட 30 பேர் வருகை தந்தனர். இந்த விமானம் தரையிறங்கிய போது, நீரைத் தாரை வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரலாறு

இரண்டாம் உலகப் போரின் போது யாழ்ப்பாணம் பலாலியில் விமானத் தளத்தை பிரிட்டன் விமானப் படை அமைத்தது. அதன்பின்னர் 1947ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் கொழும்பு - இரத்மலானையிலிருந்து புறப்படும் விமானம் பலாலியில் தரையிறங்கி சென்னைக்கு பயணத்தைத் தொடரும்.

1976ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையின் முகாம் பலாலி விமானத் தளத்தில் அமைக்கப்பட்டது. அதனால் 1982ஆம் ஆண்டு தொடக்கம் விமானப் படைக்கு பலாலி விமானத் தளம் மாற்றப்பட்டது. 

1990ஆம் ஆண்டு பலாலி உள்ளிட்ட வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு லயன் எயர் நிறுவனத்தால் கொழும்புக்கான சிவில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க,கல்வி இராஜன்க அமைச்சர் விஜயகலா ,பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,சுமந்திரன் ,சரவணபவன் ,சிறீதரன்,சித்தார்த்தன், என பலர் கலந்து கொண்டனர்.