(நா.தனுஜா)

வட,கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாமே உறுதி செய்தோம். எனவே நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதிரணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கான அவர்களின் ஆதரவை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததிலேயே கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்று யாழ் சர்வதேச விமானநிலையம் திறந்துவைக்கப்படுகிறது. அதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு சென்றிருக்கின்றார். அங்கும் அவர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார்.

அதேபோன்று எமது அரசாங்கமே தெற்கைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தது. தற்போது சர்வதேச விமானநிலையம் ஒன்றும் வடக்கில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை விடவும் வட,கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தை நாமே உறுதி செய்தோம்.

எனவே நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதிரணி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. அதனை அவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.