(எம்.மனோசித்ரா)

கோத்தாபய ஜனாதிபதியானாலும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதைப் போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் புதிய பிரதமரை நியமிக்க முடியும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இன்றி பிரதமரை நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சி நீதிமன்ற தீர்ப்பினால் முறியடிக்கப்பட்டமையை அவர் மறந்து விடக் கூடாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லையென்றால் நான்கரை வருடங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமே இருக்க வேண்டும். 

கோத்தாபய ராஜபக்ஷ ஒருபோதும் ஜனாதிபதியாகப் போவதில்லை. சில வேளை ஜனாதிபதியானாலும் அப்போதும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராவார். அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதாக இருந்தால் பொதுஜன பெரமுன பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் அவர்களால் அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்றும் கூறினார்.