இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற  மனித உரிமை மீறல்கள் மற்றும்  யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில்  உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு  பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று தொடர்ந்தும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் அதற்­கான  நட­வ­டிக்­கைகள் இன்­னமும்  எடுக்­கப்­ப­ட­வில்லை.

2009ஆம்­ ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­தினால்  பேர­ழி­வு­க­ளுக்கு மத்­தியில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. யுத்­தத்­தின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் உயி­ரி­ழந்­த­துடன்  பேர­ழி­வு­களும் ஏற்­பட்­டி­ருந்­தன.  பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர்  படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர்.  ஆயி­ரக்­க­ணக்­கானோர்  காணா­மல்­போ­யி­ருந்­தனர். 9 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டனர்.  90 ஆயிரம் பெண்கள் வடக்கு, கிழக்கில் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர்.

இவ்­வாறு  பேரி­ழப்­புக்­களை சந்­தித்த மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட­வேண்டும் என்று கோரிக்கை எழுந்­தி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்கு  கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இலங்­கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் அன்­றைய செய­லாளர் நாயகம் பான் கீ மூனிடம் பொறுப்­புக்­கூறும்  விட­யத்­திற்­கான உறு­தி­மொழி  அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­பக் ஷவினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

யுத்தம் முடி­வ­டைந்து தற்­போது பத்­து­வ­ரு­டங்கள் ஆகி­விட்­ட ­போ­திலும் இன்­னமும் யுத்­தப்­பா­திப்­புக்­குள்­ளான தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வில்லை.  காணா­மல்­போன உற­வு­க­ளுக்கு நேர்ந்­த­ கதி தொடர்பில் அறி­ய­மு­டி­யாது  பத்­து­வ­ரு­டங்கள் கடந்த நிலை­யிலும்  அவர்­க­ளது உற­வி­னர்கள் பெரும் அல்­லல்­பட்டு வரு­கின்­றனர்.  தொடர்ந்தும் தமது உற­வுகள் மீள திரும்பும் என்ற நம்­பிக்­கையில் அந்த மக்கள் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­பக் ஷவின் காலத்தில் நல்­லி­ணக்க ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. அதன் பின்னர் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது.  இந்த ஆணைக்­கு­ழுக்கள் முன்­னி­லையில்  காணா­மல்­போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி அவர்­க­ளது ஆயி­ரக்­க­ணக்­கான உற­வி­னர்கள் அழு­து­பு­லம்பி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.  நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­னி­லையில் ஆயி­ரக்­க­ணக்­கான உற­வுகள்  சாட்­சி­யங்கள் அளித்­த­போதும் உரிய பயன்­கி­டைக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து பர­ண­கம ஆணைக்­குழு முன்­னி­லை­யிலும்  தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி இந்த மக்கள் அவ­லக்­குரல் எழுப்­பினர்.  சாட்­சி­யங்­களை அளித்­தனர். எழுத்­து­மூ­ல­மா­கவும் முறைப்­பா­டு­களை கைய­ளித்­தனர்.

காணா­மல்­போன 20 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்­க­ளது முறைப்­பா­டுகள் இந்த ஆணைக்­கு­ழு­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.  காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு உரிய தீர்வு காண­வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில் இந்த ஆணைக்­கு­ழுவும்  பரிந்­துரை செய்­தி­ருந்­தது.  ஆனால்  காணா­மல்­போ­னோரை கண்­ட­றி­வ­தற்­கான  நட­வ­டிக்­கை­களோ அல்­லது  அது­தொ­டர்பில் பொறுப்­புக்­கூ­று­வ­தற்­கான செயற்­பா­டு­களோ இடம்­பெ­ற­வே­யில்லை.

காணா­மல்­போன உற­வு­களை மீட்­டுத் ­த­ரு­மாறு கோரி உற­வி­னர்கள் போராட்டம் நடத்த முடி­யாத நிலைமை அன்­றைய ஆட்­சி­க்கா­லத்தில் நில­வி­யி­ருந்­தது.  அன்­றைய  ஐ.நா. மனித  உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது அவ­ரது கவ­னத்­தை­யீர்க்கும் வகையில் கொழும்பில் காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் போராட்­டத்தை  நடத்த முற்­பட்­ட­போது அதற்கும் அச்­சு­றுத்­தல்­களும் தடை­களும்  விதிக்­கப்­பட்­டன.  வடக்­கி­லி­ருந்து  கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள்  வவு­னி­யா­வுக்கும் அநு­ரா­த­பு­ரத்­திற்­கு­மி­டையில்  இறக்கி திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.  இவ்­வா­றான  அச்­சு­றுத்­த­லான நிலைமை அன்று நில­வி­ய­போ­திலும் தமது உற­வு­களை மீட்­டுத் ­த­ரு­மாறு கோரி அடக்­கு­மு­றைக்கு மத்­தி­யிலும் மக்கள் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர்.

இறுதி யுத்­தத்­தின்­போது சர­ண­டைந்­த­வர்கள் மற்றும் உற­வி­னர்­க­ளினால் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்கள்  முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­ட­போது கைது செய்­த­வர்கள் என ஆயி­ரக்­க­ணக்­கான­வர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருந்­தனர்.  தமது உற­வி­னர்­களை எங்கு எப்­போது   யாரிடம் கைய­ளித்தோம் என்று  உறு­தி­யான தக­வல்கள்  வழங்­கப்­பட்­ட­போ­திலும்  அத்­த­கை­ய­வர்­க­ளுக்­குக்­கூட என்ன நடந்­தது என்­பது குறித்து இது­வரை விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலை­யில்தான் 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்று காணா­மல்­போ­னோ­ரது உற­வுகள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர்.  இதற்­கி­ணங்க  இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை  உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ர­ணையைக் கோரிய பிரே­ரணை 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 1ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இதற்கு  அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­டது. அவ்­வாறு  ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­போ­திலும்  அதற்­கான நட­வ­டிக்­கைகள் உரிய வகையில் எடுக்­கப்­பட­வில்லை.

காணா­மல்­போனோர்  விவ­காரம் தொடர் பில் ஆரா­யப்­பட்டு தீர்­வு­கா­ணப்­படும் என்று  உறுதி வழங்­கப்­பட்­ட­போ­திலும் அவ்­வி­டயம் தொடர்­பிலும் உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆனாலும் மனித உரிமை ஆணைக்­கு­ழு­விற்கு அளித்த வாக்­கு­று­திக்கு அமைய  காணா­மல்­போனோர்  தொடர்பில் ஆராயும் ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு  விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. சாலிய பீரிஸ் தலை­மையில் அமைக்­கப்­பட்ட இந்த குழு தற்­போதும் செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனால் காணாமல் போனோரை மீட்­ப­தற்கோ அல்­லது அவர்­க­ளுக்கு நேர்ந்த கதி என்ன என்­பது தொடர்பில் அறி­விப்­ப­தற்கோ அந்­தக்­கு­ழுவும் இன்­னமும் உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­க­வில்லை.

இவ்­வாறு  பிரச்­சி­னைகள் தொடர்ந்­து­வரும் நிலையில் அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்பும் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியின் சார்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­­பக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.  அவர் நேற்று முன்­தினம் கொழும்பில்  கூட்­டுக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் இணைந்து செய்­தி­யாளர் மாநா­டொன்­றி­னையும் நடத்­தி­யி­ருந்தார்.

இந்த மாநாட்டில் கருத்து தெரி­வித்த அவர் இறுதி யுத்த காலத்தில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள்  புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு அனை­வரும் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­தாக எவரும் கூறலாம். ஆனால்  அவை அனைத்­துமே குற்­றச்­சாட்­டுக்கள் மட்­டு­மே­யாகும். யுத்­தத்­தின்­போது இரா­ணு­வத்தை நான் வழி­ந­டத்­த­வில்லை. இரா­ணு­வத்­த­ள­ப­தியே வழி­ந­டத்­தி­யி­ருந்தார் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இத­னை­விட  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 2015ஆம் ஆண்டு தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றும் அதனை நிரா­க­ரிப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.  முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரான கோத்­த­பாய ராஜ­­பக் ஷவின் இத்­த­கைய கருத்­துக்கள்  காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை நிச்­ச­ய­மாக ஏற்­ப­டுத்தும்.

ஏனெனில்  காணா­மல்­போன உற­வு­க­ளுக்கு  நேர்ந்த கதி என்ன என்­பது தொடர்பில் அறிய வேண்டும் என்றும் தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறும் கோரி­வரும்  இந்த மக்கள் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் தமக்கு தீர்வு வரும் என்று எதிர்­பார்த்­தி­ருந்­தனர். ஆனால் அதற்­கான முழு­மை­யான தீர்வு இன்­னமும் காணப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரான கோத்­த­பாய ராஜ­­பக் ஷ  காணா­மல்­போனோர் விவ­காரம் என்­பது குற்­றச்­சாட்டு மட்­டுமே என்றும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளமை அந்த மக்களை கவலைக்குட்படுத்தியுள்ளது.

இதேபோன்று  பொறுப்புக்கூறும் விடயத்திலும்  முன்னைய நிலைப்பாட்டிலேயே தான் உள்ளமையை அவர்  எடுத்துக் கூறியிருக்கின்றார்.  இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற  மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியம் சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும்  அதற்கான ஜெனிவா தீர்மானத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும்  அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இதனைவிட இராணுவத்தை தான் வழிநடத்தவில்லை என்று அவர் கூறியதன் மூலம் குற்றச்சாட்டுக்களிலிருந்து  விலகிக்கொள்ளும் தன்மை தெளிவாக தெரிகின்றது.  எனவே  பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின்  இத்தகைய நிலைப்பாடுகளை  மாற்றிக்கொள்ளவேண்டியது  அவசியமாக உள்ளது. தமிழ் மக்களின் துன்ப துயரங்களை  புரிந்து கொண்டு அதற்கேற்றவகையில்  இனியாவது நிலைப்பாடுகளை மாற்று வதற்கு பொதுஜன  முன்னணியினர் முயலவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி ஆசிரிய தலையங்கம்