ஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு

By R. Kalaichelvan

17 Oct, 2019 | 03:29 PM
image

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் (17) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபா நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு 72 ஆசனங்களுக்குக் குறைந்த பொம்பார்டியர் - 100 (Bombardier - 100) வகை விமானங்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

யாழ் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right