ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கபட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றுடன் 970 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எமது போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்குடன் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கபட்டு வருகிறது.எனினும் நாம் போரின் போது குண்டு தாக்குதல்களில் சிதைவடைந்து, உயிரிழந்த பிள்ளைகளை பற்றி கேட்கவில்லை. போர் முடிவடைந்த பின்னர் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து இராணுவத்திடம் கையளிக்கபட்ட பிள்ளைகளையே நாம் கேட்கிறோம். புனர்வாழ்வழிப்பு என்ற பெயரில் அவர்களின் கைகளில் கொடுத்த எமது பிள்ளைகளையே நாம் கோருகின்றோம். ஒவ்வொருவரும் பதவிகளுக்கு வருவதற்காக திரிபுபடுத்தபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 எமது பிள்ளைகள் இல்லை என்றால் அதனை கடந்த 2010 ஆம் ஆண்டு  “பரணகம” ஆணைக்குழு வவுனியாவிற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட போதே எமது பிள்ளைகள் இல்லை என்று தெரிவித்திருக்க வேண்டும்.

எம்மிடம் முழுமையான ஆதாரங்கள் இருக்கிறது. எனவே எமது பிள்ளைகள் இல்லை என்று யாருமே சொல்ல வேண்டாம். புனர்வாழ்விற்கென தெரிவித்து கையளிக்கபட்ட பிள்ளைகள் எங்கே என்று சொல்லாமல், அப்படி ஒரு சம்பவம் இலங்கையில் இல்லை என்று இவர்கள் எவ்வாறு தெரிவிப்பார்கள். எனவே இவர்கள் மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடிமைக்கு சிறந்த உதாரணம் முத்தையா முரளிதரன், காணாமல் ஆக்கபட்டோருக்கு தீர்வின்றி இலங்கைக்கு நிகழ்காலமும் இல்லை போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.