(நா.தினுஷா)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை.அவர் நாட்டின் பொது  வேட்பாளர். அதன் காரணமாகவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அவருக்கு அதரவளிக்க முன்வந்துள்ளது.

மாறாக பொதுஜன பெரமுனவுக்கு சுதந்திர கட்சி ஆதரவு வழங்க வில்லை எனவும்  நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக நிச்சயமாக கோத்தாபயவை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் சுதந்திர கட்சியின் மகளீர் முன்னணியின் பொதுச் செயலாளர் சந்திரிகா டீ சொய்சா தெரிவித்தார். 

கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ; 

நாட்டின் எதிர்காலம் குறித்து சரியான தீர்மானம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும் சுதந்திர கட்சி சரியான முடிவுகளை எடுத்துள்ளது. வரலாற்று ரீதியில் முடிவு எடுக்க வேண்டி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தரப்பத்திலும் சிறந்த தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தோம். கட்சியின் தலைவரும் சரியான பாதையில் பயணிப்பதற்கான  வழிகாட்டல்களையே வழங்கி வந்துள்ளார். 

மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு தற்போது சகலரும் ஒன்றுகூடியுள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.