(இராஜதுரை ஹஷன்)

அரச ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளுக்கு எதிராக  இன்று தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார். 

வியத்மக அமைப்பின் காரியாலயத்தில்  இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச ஊடகங்கள் தற்போது ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றது.  அரசியல்  ரீதியிலான விடயங்களை நாட்டு மக்கள் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் நடைமுறையில் அவ்வாறான   தன்மைகள் காண்பது அரிது   ஆளும் தரப்பின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு  வழங்கும் முக்கியத்துவம் ஏனைய  ஜனாதிபதி வேட்பாளர் களுக்கு வழங்கப்படுவது இல்லை. தேவையற்ற  அரசியல் பிரச்சாரத்தை பொதுஜன பெரமுன அரச ஊடகங்களின் வாயிலாக எதிர்பார்க்கவில்லை.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ   மற்றும் எதிரணியின்  உறுப்பினர்கள் குறிப்பிடும்  செய்திகள் திரிபுப்படுத்தி  தவறான கண்ணோட்டத்தில் ஒளிப்பரப்படுகின்றன. இது  முற்றிலும் கண்டிக்கத்தக்கது. ஆகவே அரச ஊடகங்களுக்கு எதிராக இன்று தேர்தல் ஆணைக்குழுவில்  உரிய ஆவணங்களுடனான  முறைப்பாடு செய்யப்படும்.

ஜனாதிபதி தேர்தலில்    ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிப் பெறுவார்.  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய  பாராளுமன்றத்தை மார்ச் 12 வரை கலைக்க முடியாது. அதுவரையில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணக்கமாகவும் செயற்பட முடியாது.

பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க   சுயமாகவே  பதவி விலக வேண்டும். இதற்கான கோரிக்கையினை முறையாக முன்வைப்போம். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடையாது. ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதுடன்   பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தினை   சுதந்திர கட்சியுடன் ஒன்றினைந்து பலப்படுத்துவோம். என்றார்.