புத்தளம் மாவட்டத்தின் சில கரையோரப்பகுதிகள் கடலரிப்பினால் பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ளது. இதன்காரணமாக நுரைச்சோலை கரையோரப்பகுதியின் கொய்யாவாடி, இலந்தையடி ,ஆலங்குடா ஆகிய பிரதேசங்கள் தொடர்ச்சியாக கடல் அரிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதுவரையில் சுமார் 150 மீற்றர் வரை கடல் அரிப்பிற்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கரையோரப்பகுதியில் சுமார் 150ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதுடன் கடலரிப்பினால் இவர்களின் வாழ்வாதாரம் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தற்போது மீனவ மக்களின் படகுகள் கூட கரையோரங்களில் வைக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றன. சுனாமி ஏற்பட்ட போது பாதுகாப்பிற்காக கரையோரப்பகுதிகளில் சவர்க்கு மரங்கள் நாட்டப்பட்டபோதிலும் தற்போது கடலரிப்பினால் அந்த மரங்கள் சரிந்து வீழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

அத்துடன் கடலரிப்பை தடுப்பதற்காக கற்கல் போடப்பட்டுள்ள போதிலும் கடலரிப்பின் தீவிரம் இதுவரையிலும் குறையவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடலரிப்பினால் தற்போது தமது குடியிருப்புகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். கடலரிப்பினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.