(இராஜதுரை ஹஷான்)

தேசிய  மரபுரிமை, தேசிய  பாதுகாப்பு ஆகியவற்றை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முறைக்கேடுகள், ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே   பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன  தேரர் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான அரசியல்  சக்தி தோற்றம் பெற வேண்டும். இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்   பலரது அரசியல்  பயணத்தை கேள்விக்குறியாக்கும். நாடு எதிர்க் கொண்டுள்ள  பொருளாதார பிரச்சினைகள்,  தேசிய பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சவால்கள் ஆகியவற்றிற்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

நாட்டின் தேசிய மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் தேசிய பாதுகாப்பு  அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்விரண்டு விடயங்களுக்கும்  முக்கியத்துவம் அளிக்கும் பலமான   தலைமைத்துவத்தினை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.