வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  அரசாங்கம் செய்த நலன்புரிகள்  என்ன?  செலவுகள்  என்ன? பாதிக்கப்பட்டவர்களின்  உண்மை நிலை என்ன? என்ற உண்மைகளை  பாராளுமன்றமும் மக்களும் தெரிந்துகொள்ள  வேண்டும். இதற்காகவே பாராளுமன்றத்தில் “விவாதம்” கேட்டோம் எனத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார எம்.பி. இது தொடர்பாக மேலும்  தெரிவித்த  போது, வெள்ளத்தால் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதிலும் மக்களை  நேரில்  சென்று  பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிவதில் எமது தரப்பு எம்.பி.க்கள் நேரடியாக செல்கின்றார்கள்.  நானும் சனிக்கிழமை முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுடனேயே இருந்தேன். 

ஆனால் “பரசூட்”களிலிருந்து  திடீரென குறித்த ஐ.தே.கட்சி  எம்.பி.க்கள்,  அமைச்சர்கள் மக்களின் குறைகளை கேட்கவோ நிவாரணங்களை  வழங்கவோ செல்லவில்லை.  இதனை மக்கள் அறிவார்கள். 

நாங்கள் ஊடக கலை விழாக்களை காண்பிக்கவில்லை. அரச தரப்பினர் ஊடக கலை விழாக்களை நடத்துகின்றனரே தவிர  மக்களை  கவனிக்கவில்லையென்றே கூற வேண்டும். 

அதேவேளையில்  வடக்கு உட்பட நாடு முழுவதும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக  முழுமையான   அறிக்கையை  அரசு  சமர்ப்பிக்க  வேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுத்த  நிவாரணங்கள்?  செலவுகள் என்பது தொடர்பில் பாராளுமன்றம் தெரிந்து கொள்ள  வேண்டும். 

இதற்காகவே பாராளுமன்றத்தில் அனர்த்தம் தொடர்பாக ஒரு நாள் விவாதத்தை கோரியுள்ளோம் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி.தெரிவித்தார். 

(ப.பன்னீர் செல்வம்)